13 தேங்காய் தீப வழிபாடு... வேண்டுதலை நிறைவேற்றும் புனித அந்தோணியார்

அந்தோணியாருக்கு மிகவும் பிடித்த எண் 13 என்பதால், என்ன நிகழ்வு நடைபெற்றாலும் அந்த எண்ணை அடிப்படையாக கொண்டு நடத்தப்படுகிறது.
மதுரை பழைய குயவர்பாளையம் புனித அந்தோணியார் ஆலய சிறப்புகள்
புனித அந்தோணியார் ஆலயம்
Published on

மதுரை பழைய குயவர்பாளையத்தில் உள்ளது புனித அந்தோணியார் ஆலயம். இந்த ஆலயத்திற்கு மதுரை மாவட்டம் மட்டுமின்றி சிவகங்கை உள்பட அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் எண்ணற்ற மக்கள் வருகை தந்து வழிபடுகின்றனர்.

இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 13 நாட்கள் நடைபெறும் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. அந்தோணியாருக்கு மிகவும் பிடித்த எண் 13. ஆதலால் இங்கு என்ன நிகழ்வு நடைபெற்றாலும் 13 எண்ணை அடிப்படையாக கொண்டு நடைபெறும்.

காணாமல் போன பொருட்கள் கிடைக்க...

13 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். விழாவின் முக்கிய நிகழ்வாக 12-வது நாள் தேரோட்டம் நடைபெறும்.

அதேபோல இந்த ஆலயத்தில் முதல் செவ்வாய்க்கிழமை தோறும் சிறப்பு திருப்பலி நடைபெறும். காணாமல் போன வாகனம், நகை, பணம் உள்ளிட்ட எந்தவொரு பொருட்களாக இருந்தாலும், அவை திரும்ப கிடைப்பதற்கு, இந்த ஆலயத்தில் உள்ள அந்தோணியாரை மனமுருக வேண்டுகிறார்கள். இவ்வாறு வேண்டினால், காணாமல் போன பொருட்கள் நிச்சயம் கிடைத்து விடும் என பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

தேங்காய் தீபம்

குழந்தை வரம், கல்விச்செல்வம், வேலைவாய்ப்பு, திருமண பாக்கியம் உள்பட பல்வேறு வேண்டுதல்கள் நிறைவேற தேங்காய் விளக்கு (தேங்காய் தீபம்) ஏற்றி வழிபடுவது வழக்கமாக உள்ளது. அந்த தீபமும் 13 என்ற எண்ணிக்கையில் இருப்பது சிறப்பாகும். அதேபோல 13 மெழுகுவர்த்தி ஏற்றியும் தங்கள் வேண்டுதல்களை அந்தோணியாரிடம் முறையிடுகின்றனர். தோல் வியாதியால் அவதிப்படுபவர்கள் உப்பு, மிளகு வாங்கி வைத்து அந்தோணியாரை வழிபடுகின்றனர்.

இங்கு வந்து வேண்டிக்கொண்டால், அந்த வேண்டுதல்கள் நிறைவேறி, புதுமைகள் நிகழ்வதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com