கள்ளழகர் கோவிலில் ஆடித் திருவிழா தொடங்கியது: நிகழ்ச்சிகள் விவரம்

ஆடிப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஜூலை 29-ம் தேதி மாலையில் பதினெட்டாம்படி திருக்கதவுகள் திறக்கப்பட்டு படி பூஜை நடைபெறும்.
மதுரை கள்ளழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 29.7.2026 தேரோட்டம்
ஆடி திருவிழா கொடியேற்றம்
Published on

மதுரை,

திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி என்று போற்றப்படும் கள்ளழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆடி மாதம் நடைபெறும் ஆடி பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அதன்படி இந்த ஆண்டின் ஆடிப் பெருந்திருவிழா இன்று காலை 8.35 மணிக்கு மங்கள இசை முழங்க கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தங்க கொடிமரத்தில் கருட பகவான் முத்திரை பதிக்கப்பட்ட கொடியில் மாவிலை, நாணல் புல் மலர் மாலைகள் இணைக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. இதையொட்டி உற்சவர் சுந்தரராஜ பெருமாள், தேவியருடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

வாகன சேவை

விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகள், வாகன சேவை நடைபெறும். திருவிழாவின் முதல் நாளான இன்று இரவு அன்ன வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். நாளை இரவு சிம்மவாகனப் புறப்பாடு. 23ந் தேதி அனுமார் வாகனத்தில் பெருமாள் புறப்பாடு, 24ந் தேதி இரவு கருட வாகனப் புறப்பாடு, 25ந் தேதி காலையில் கள்ளழகர் பெருமாள் தங்க பல்லக்கில் புறப்பாடாகி மதுரை சாலையில் உள்ள மறவர் மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெற உள்ளது. அன்று இரவு சேஷ வாகனத்தில் புறப்பாடு நடைபெறும்.

தேரோட்டம்

26ந் தேதி இரவு யானை வாகனத்தில் சுவாமி புறப்பாடு, 27ந் தேதி இரவு புஷ்ப சப்பரம், 28ந் தேதி காலையில் தங்கப் பல்லக்கு, இரவு குதிரை வாகன புறப்பாடு நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 29ந் தேதி தேரோட்டம் நடைபெறும். அன்றைய தினம் காலையில் 7.05 மணிக்கு மேல் 7.25 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படும். அன்றிரவு பூச்சப்பரம், பதினெட்டாம்படி திருநிலை கதவுகளுக்கு சந்தனம் சாத்துபடி நடைபெறும். 30ந் தேதி தீர்த்தவாரி, 31 ஆம் தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி ஆடி அமாவாசை அன்று இரவு கருட வாகனத்தில் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளுவார் இதனைக் காண சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருக்கோவிலுக்கு வருகை தந்து தரிசனம் செய்வார்கள். இந்த திருவிழா ஏற்பாடுகளை இணை ஆணையர் ஹரிஹரன் மற்றும் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com