

திருவள்ளூர்,
திருத்தணியில் நடைபெறும் ஆடிக்கிருத்திகை விழாவில் பங்கேற்பதை முதியோர்கள் மற்றும் கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோவில், முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் ஆடிக்கிருத்திகை திருவிழா, வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டின் ஆடிக்கிருத்திகை விழா நேற்று தொடங்கியது. வரும் 8-ம் தேதி வரை திருவிழா நடைபெற உள்ளது.
முதல் நாளான நேற்று அஸ்வினி திருவிழா நடைபெற்றது. அதிகாலையில் மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பிறகு, உற்சவர் முருகப்பெருமான், வள்ளி தெய்வானையுடன் காவடி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று ஆடி பரணி விழா நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான ஆடிக்கிருத்திகை மற்றும் 3 நாட்கள் நடைபெறும் தெப்பத் திருவிழா, நாளை சரவண பொய்கை திருக்குளத்தில் தொடங்குகிறது. சரவண பொய்கை திருக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வள்ளி, தெய்வானை சமேதராய் உற்சவமூர்த்தி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். 8-ம் தேதி மூன்றாம் நாள் தெப்பத்துடன் விழா நிறைவுபெறுகிறது.
திருவிழாவையொட்டி, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட தமிழகப் பகுதிகள் மற்றும் ஆந்திராவின் பல்வேறு இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பெரும்பாலான பக்தர்கள் பால் காவடி, அலகு காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகளை எடுத்து வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்கின்றனர்.
விழாவை முன்னிட்டு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருத்தணி ஆடிக்கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்பு கருதி கர்ப்பிணி பெண்கள், முதியோர், மாற்றத்திறனாளிகள் சாமி தரிசனம் செய்ய வர வேண்டாம் என்று மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் கவிதா வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருத்தணி முருகன் கோவிலில் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நடைபெற உள்ள ஆடிக்கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு சுமார் 5 முதல் 7 லட்சம் பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டில் 5 லட்சம் பக்தர்கள் வருகை புரிந்துள்ளனர். இது தொடர்பாக அனைத்து முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளும் சிறப்பான முறையில் மாவட்ட நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இருப்பினும் அதிக பக்தர்கள் வருகை காரணமாக திருத்தணி நகரத்துக்குள் வாகனப் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் ஆகியோர் பாதுகாப்பு கருதி மேற்படி தினங்களில் நேரடி தரிசனத்திற்கு வருகை புரிவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
ஆடிக்கிருத்திகை விழா பாதுகாப்பாக நல்ல முறையில் நடந்திட மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.