உலக மக்களின் நலன் வேண்டி ஆடி அமாவாசை யாகம்

ஆதி பரஞ்சோதி சகலோக சபை சார்பில் நடைபெற்ற யாகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
உலக மக்கள் நலன் வேண்டி ஆதி பரஞ்சோதி சகலோக சபை சார்பில் யாகம்
ஆடி மாத அமாவாசை யாகம்
Published on

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை உள்ளது. இந்த சபை சார்பாக உலக மக்களின் நலன் வேண்டி, ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு மகா பிரத்யங்கரா தேவி யாகபூஜை நடைபெற்றது.

இந்த யாக பூஜையை ஆதி பரஞ்சோதி சகலோக சபை நிர்வாகி திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.

யாகத்தில் மிளகாய் வற்றல்

இந்த சிறப்பு யாகத்தை முன்ளனிட்டு பிரத்யங்கரா தேவி அம்மன், நரசிங்க பெருமாளுக்கு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் யாககுண்டத்தில் மிளகாய் வற்றல் ஏராளமான அளவில் கொட்டப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க யாக வேள்வி பூஜை நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, சேலம், கோவை, திருப்பூர், கமுதி, உடுமலைப்பேட்டை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வெளிநாட்டு பக்தர்கள் இணையதளம் வழியாக பூஜையில் பங்கேற்றனர். பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் பலர், தங்களது வேண்டுதல்களை காகிதத்தில் எழுதி, அதனை அக்னி குண்டத்தில் போட்டு வேண்டிக்கொண்டனர்.

யாக பூஜையின் பலன்கள்

இந்த பூஜையினால் வியாபார வளர்ச்சி, செல்வம் சேர்க்கை, குடும்ப அமைதி, திருமணம் கைகூடும், குழந்தை பாக்கியம், முன்னோர்கள் வழி பாவம் தீரும் என தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, கோவிலில் உள்ள கோசாலையில் வளர்க்கப்பட்டு வரும் சுமார் 100க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகளுக்கு அகத்திக்கீரை வழங்கப்பட்டு அமாவாசை கோபூஜை நடந்தது. நிறைவாக யாக பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com