தீவினைகளை அகற்றும் வன பத்ரகாளியம்மன்

செய்வினை, பில்லி -சூனியம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், இந்தக் கோவிலுக்கு ஒருமுறை வந்து அம்மனை மனமுருக வேண்டிக்கொண்டால் அத்தகைய கோளாறுகள் நீங்குவதாக ஐதீகம்.
தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன்
Published on

மேற்கு தொடர்ச்சி அடிவாரத்தில், பவானி ஆற்றங்கரையில், காடுகள் நிறைந்த பகுதியில் தனக்கென தனி சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தி, தன்னை நாடிவரும் பக்தர்களின் குறைகளை தீர்த்து வருகிறாள், தேக்கம்பட்டி வன பத்ரகாளியம்மன்.

தல புராணம்

முன்னொரு காலத்தில் ஈசனிடம் இருந்து பல்வேறு வரங்களைப் பெற்று, தேவர்களையும், முனிவர்களையும், மக்களையும் துன்புறுத்தி வந்தான், மகிஷா சூரன். இவனை அழிப்பதற்காக அம்பாள், சிவபெருமானை நினைத்து தியானம் செய்து பூஜித்தாள். பின்னர் அந்த அசுரனை அழித்தாள். பார்வதி தேவி, சிவபெருமானை நினைத்து தியானம் செய்த இடத்தில் அமைந்திருக்கிறது. பத்ரகாளியம்மன் கோவில். வனப்பகுதிக்குள் இருப்பதால் 'வன பத்ரகாளியம்மன்' என்று பெயர் வந்தது. இந்த ஆலயம், ஆரவல்லி, சூரவல்லி கதையோடு தொடர்புடையதாக கூறப்படுகிறது.

ஆண் வாடையே அறியாமல் வாழ்ந்தவர்கள், ஆரவல்லி, சூரவல்லி ஆகியோர். இவர்கள் ,இருவரும் மந்திரம், சூனியம் ஆகியவற்றால் மக்களை தங்களின் வசப்படுத்தி, அவர்களை துன்புறுத்தி கொடிய ஆட்சி செய்தனர். இந்த இருவரையும் அடக்குவதற்காக பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் சென்றான். ஆனால் ஆரவல்லி, சூரவல்லியிடம் அவன் அகப்பட்டு போனான். பின்னர் அவனை கிருஷ்ணன் காப்பாற்றினார். பின்னர் பாண்டவர்களின் உறவினனான அல்லிமுத்து என்பவனை, அந்த இரு சூனியக்காரிகளையும் அடக்க அனுப்பி வைத்தனர். அவன் இத்தல வன பத்ரகாளியம்மனை வழிபட்டு, அந்த சூனியக்காரிகளின் கொட்டத்தை அடக்கினான் என்று கூறப்படுகிறது.

கோவிலின் சிறப்பம்சம்

இவ்வாலய அம்மன், சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறாள். புதிதாக வாகனம் வாங்கும் இப்பகுதி மக்கள், இந்தக் கோவிலுக்கு வந்து பூஜை செய்த பின்னரே அதனை பயன்படுத்துகின்றனர். இந்த வழியாக செல்லும் பலரும் வன பத்ரகாளியம்மன் கோவில் முன்பாக நின்று, அன்னையை வணங்கிய பிறகே புறப்பட்டுச் செல்வார்கள்.

பகாசுரன், பீமன் ஆகியோர் இக்கோவிலின் காவல் தெய்வங்களாக உள்ளனர். இவர்களுக்கு இடையில் குந்தி தேவி ஒரு குழந்தையுடன் அமர்ந்திருக்கும் சிலை ஒன்றும் உள்ளது. இந்தக் கோவிலில் இருந்து 200 மீட்டர் தொலைவில் பவானி ஆற்றின் படித்துறையில் விநாயகர் கோவில் உள்ளது. பவானி ஆற்றில் வெற்றிலை மீது கற்பூரத்தை ஏற்றி ஆற்றில் விடுவது இக்கோவிலின் மரபாக உள்ளது. சிறிது தூரம் நடந்து வந்தால் நாக தேவதை நமக்கு காட்சி தருகிறாள்.

அனுமதி கேட்கும் வழக்கம்

புதிதாகத் தொழில் தொடங்கும் நபர்கள், இல்லத்தில் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களை நடத்தலாமா என்று கேட்க வரும் நபர்கள், சுவாமி முன்பாக பூ போட்டு பார்க்கும் வழக்கம் இங்கே இருக்கிறது.

சிவப்பு, வெள்ளை ஆகிய நிறத்திலான பூக்களை தனித்தனி பொட்டலங்களில் போட்டு, அவற்றை அம்பாளின் காலடியில் வைத்து, ஏதாவது ஒன்றை எடுத்துப் பார்ப்பார்கள். நாம் மனதில் எந்தப் பூவை நினைக்கிறோமோ, அந்தப் பூ வந்து விட்டால் அம்பாள் உத்தரவு தந்து விட்டதாக ஐதீகம். இது இக் கோவிலில் இருக்கும் மிகச் சிறப்பான பழக்க வழக்கமாக வும், காலங்காலகமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழக்கமாகவும் இருக்கிறது

வன பத்ரகாளியம்மன் என்றாலே கிடாவெட்டுதான் நினைவிற்கு வரும். அம்மனுக்கு உகந்ததாக கருதப்படும் ஆடு பலியிடுதல் நிகழ்வு, ஒவ்வொரு வாரமும் ஞாயிறு, செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் நடைபெறுகிறது. ஒரு வாரத்திற்கு சுமார் 300 முதல் 400 கிடா வரை அம்மனுக்கு பலியிடப்படுகிறது. ஒரு ஆண்டிற்கு சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிடா வெட்டுகின்றனர். இக்கோவிலின் தல மரமாக தொரத்தி மரம் உள்ளது. குழந்தை வரம் வேண்டுபவர்கள் இந்த மரக்கிளையின் நுனியில், கல்லை வைத்து தொட்டில் கட்டி விடுகின்றனர். குண்டம் இரங்கல் என்னும் தீ மிதிக்கும் திருவிழாவும், வன பத்ரகாளியம்மன் கோவிலில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.

தீவினை அகற்றும் அன்னை

செய்வினை, பில்லி -சூனியம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், இந்தக் கோவிலுக்கு ஒருமுறை வந்து அம்மனை மனமுருக வேண்டிக்கொண்டால் அத்தகைய கோளாறுகள் நீங்குமாம்.

வேண்டிய காரியம் நன்றாக முடிந்தால், பெண்கள் தாலியை உண்டியலில் போடும் வழக்கமும் உள்ளது. தங்கம், வெள்ளி, பணம் ஆகியவற்றை நேர்த்திக்கடன்களாக வழங்குவது வழக்கமாக உள்ளது. தவிர கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்குகிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியவுடன் எலுமிச்சம்பழ மாலை சாற்றுவது அம்மனுக்கு விசேஷம். மேலும் இக்கோவிலில் எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்கிறார்கள். இவ்வாலயம் தினமும் காலை 6 மணி முதல், இரவு 8 மணி வரை திறந்திருக்கும். அமாவாசை நாட்களில் காலை 5 மணி முதல், இரவு 8.30 மணி வரை, பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியும்.

அமைவிடம்

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில், வன பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து பேருந்து வசதியும், ஆட்டோ வசதியும் அதிக அளவில் உள்ளது.

மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Others/Devotional

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com