

தென்திருப்பேரை,
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் வருடத்திற்கு நான்கு திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறும். மாசி மற்றும் வைகாசி மாதம் நம்மாழ்வாருக்கும், பங்குனி மற்றும் சித்திரை மாதம் ஆதிநாதருக்கும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் வைகாசி மாதம் நம்மாழ்வார் பிறந்த மாதம் என்பதால் ஆண்டு தோறும் வைகாசி மாதம் நம்மாழ்வார் அவதார திருவிழா கொண்டாடப்படுவது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான வைகாசி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், அதை தொடர்ந்து திருமஞ்சனம், தீபாராதனை, நித்தியல் கோஷ்டி நடைபெற்றது. காலை 7 மணிக்கு நம்மாழ்வார் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். தொடர்ந்து காலை 7.30 மணிக்கு கொடிபட்டம் மாட வீதிகளை சுற்றி வந்து 8.30 மணிக்கு நம்மாழ்வார் சன்னதி முன்புள்ள கொடிமரத்தில் திருவிழா கொடி ஏற்றப்பட்டது. அர்ச்சகர் கண்ணன் கொடியேற்றினார்.
நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் விவேக், சுவாதி, பாலாஜி, கோவில் செயல் அலுவலர் சதீஷ், ஆய்வாளர் நம்பி, அறங்காவலர் குழு தலைவர் ராமானுஜம்(எ) கணேசன், உறுப்பினர்கள் காளிமுத்து, ராமலட்சுமி, பொன்ராஜ், கன்னிராஜா கள்ளப்பிரான் கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மே 25ஆம் தேதி காலை நவதிருப்பதிகளில் உள்ள ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் எம்இடர்கடிவான், திருப்புளியங்குடி காய்சின வேந்தன், இரட்டை திருப்பதி அரவிந்தர லோசனர், தேவர் பிரான், பெருங்குளம் மாயக்கூத்தர், தென்திருப்பேரை நிகரில் முகில் வண்ணன், திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் ஆகிய 9 உற்சவர்கள் ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோவிலுக்கு வருகை தருவார்கள்.
அங்கு கோவில் முன்பு உள்ள பூப்பந்தலில் வைத்து இந்த உற்சவர்கள் மற்றும் ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் என 9 பெருமாள்களுக்கும் நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். இரவு 9 மணிக்கு ஒன்பது பெருமாள்களும் கருட வாகனங்களில் எழுந்தருளி ஒரே இடத்தில் கருட சேவை நிகழ்ச்சி நடைபெறும். 29ம் தேதி தேர்த்திருவிழா நடைபெறும். திருவிழா காலங்களில் தினமும் காலை, மாலை சுவாமி நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.