

தென்திருப்பேரை,
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ளது ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில். நவதிருப்பதி தலங்களில் 9வது தலமானதும் நம்மாழ்வார் அவதாரம் செய்த ஸ்தலமாகவும் விளங்கும் இக்கோவிலில் வருடத்திற்கு நான்கு திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறும். மாசி மற்றும் வைகாசி மாதம் நம்மாழ்வாருக்கும் பங்குனி மற்றும் சித்திரை மாதம் ஆதிநாதருக்கும் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இதில் வைகாசி மாதம் நம்மாழ்வார் பிறந்த மாதம் என்பதால் ஆண்டு தோறும் வைகாசி மாதம் நம்மாழ்வார் அவதார திருவிழா கொண்டாடப்படுவது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான வைகாசி திருவிழா கடந்த 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் காலை மாலை சுவாமி நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
5 ஆம் திருவிழாவை முன்னிட்டு கடந்த 25 ஆம் தேதி நவதிருப்பதி கோவில்களில் உள்ள ஒன்பது பெருமாள்களுக்கும் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோவிலில் வைத்து மங்களா சாசனம் நடந்தது. தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு நவதிருப்பதி பெருமாள்களின் கருட சேவை நடந்தது.
9 ஆம் திருநாளான இன்று தேர்த்திருவிழா நடைபெற்றது. இதற்காக அதிகாலை 4 மணிக்கு விஸ்வரூபம், 4.15 மணிக்கு திருமஞ்சனம், 4.45 மணிக்கு தீபாராதனை, 5.30 மணிக்கு நித்தியல் கோஷ்டி நடைபெற்றது. 6.30 மணிக்கு அர்ச்சகர்கள் கண்ணன், விவேக், பாலாஜி ஆகியோர் சுவாமி நம்மாழ்வாரை அலங்காரம் செய்தனர்.
காலை 7.15 மணிக்கு சுவாமி நம்மாழ்வார் பல்லக்கில் எழுந்தருளினார். தொடர்ந்து திருத்தேரில் எழுந்தருளிய நம்மாழ்வாருக்கு பூஜைகள் செய்து 8 மணிக்கு நாங்குனேரி வானமாமலை ஜீயர் ஸ்வாமி வடம் பிடிக்க தேரோட்டம் துவங்கியது. திரளான பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர்.
மேல ரத வீதியில் இருந்து புறப்பட்ட தேர், வடக்கு ரதவீதி, கீழ ரத வீதி, தெற்கு ரதவீதி வழியாக மேல ரதவீதியில் உள்ள நிலையை வந்தடைந்தது.
இந்நிகழ்ச்சியில் நிர்வாக அதிகாரி சதீஷ், தென்திருப்பேரை கோவில் நிர்வாக அதிகாரி அஜித், ஆய்வாளர் நம்பி அறங்காவலர் குழு தலைவர் ராமானுஜம்(எ) கணேசன், உறுப்பினர்கள் காளிமுத்து, ராமலட்சுமி, பொன்ராஜ், கன்னிராஜா, ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.