

திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று மாலை 'பாக் சவாரி' உற்சவம் நடந்தது. அப்போது 'மகிழ' மரத்துக்கு அர்ச்சகர்கள் சிறப்புப் பூஜைகளை செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நிறைவடைந்த மறுநாள் மாலை 'பாக் சவாரி' உற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி நேற்று திருமலையில் 'பாக் சவாரி’ உற்சவம் நடந்தது.
அதையொட்டி மலையப்ப சுவாமி தனியாக தங்கத்திருச்சி வாகனத்தில் எழுந்தருளி, கோவில் அருகில் உள்ள அனந்தாழ்வார் தோட்டத்துக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக சென்றடைந்தார். மற்றொரு தங்கத்திருச்சி வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் எழுந்தருளினார்கள். அங்குள்ள 'மகிழ' மரத்துக்கு அர்ச்சகர்கள் சிறப்புப் பூஜைகள் செய்தனர். அதில் அதிகாரிகள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அனந்தாழ்வாரின் பக்தியைச் சோதிக்கும் நோக்கில் திருவேங்கடமுடையானும், தேவியாரும் மாறு வேடம் பூண்டு அனந்தாழ்வார் பராமரித்து வந்த மலர் தோட்டத்தில் (நந்தவனம்) பூக்களை பறித்தனர். இதைக் கண்ட அனந்தாழ்வார், மாறு வேடம் பூண்டிருந்த தேவியாரை மரத்தில் கட்டி வைத்தார். இதைப் பார்த்த வெங்கடேஸ்வரர் அனந்தாழ்வாரிடம் இருந்து தப்பித்து, எதிர் திசையில் ஓடி கோவில் கருவறைக்குள் சென்று மறைந்தார்.
தோட்டத்திற்கு வந்தது பகவான் என்பதை அறிந்ததும், தான் செய்த தவறை உணர்ந்த அனந்தாழ்வார், மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த தேவியாரை அவிழ்த்து விட்டு, மலர் கூடையை கையில் ஏந்திக் கொண்டு கோவிலை அடைந்தார். அங்கு அனந்தாழ்வாரின் ஆழ்ந்த பக்தியால் நெகிழ்ந்த திருவேங்கடமுடையான், ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் நிறைவடைந்ததும் அனந்தாழ்வார் தோட்டத்துக்கு வந்து அருள்புரிவதாக அவருக்கு வரம் அளித்தார்.
அனந்தாழ்வார் பரமபதம் அடைந்தபோது, அவருக்கு இந்த நந்தவனத்திலேயே இறுதிச்சடங்கு செய்யும்படி திருவேங்கடவன் கூற, அப்படி இறுதிச்சடங்கு செய்யப்பட்ட இடத்தில் மகிழ மரமாக அனந்தாழ்வார் எழுந்தருளியிருப்பதாக ஐதீகம்.
அனந்தாழ்வானே மகிழ மரமாக எழுந்தருளியிருப்பதை திருவேங்கடமுடையானே உறுதி செய்யும் வகையில் இத்தோட்டத்திற்கு எழுந்தருளி, மகிழ மரமாக எழுந்தருளியுள்ள அனந்தாழ்வாருக்கு மாலை சடகோபன் முதலியன சாதித்து மரியாதைகளை அருளுகிறார். பிராட்டியை விட்டு விட்டு கோவிலுக்கு அப்பிரதட்சணமாகத் திருவேங்கடமுடையான் ஓடிய நிகழ்ச்சியை நினைவூட்டும் வகையில் ஒவ்வொரு வருடமும் பிரம்மோற்சவம் முடிந்த மறுநாள் மாலை திருவேங்கடமுடையான் உபயநாச்சியார்கள் இல்லாமல், தனியாக கோயிலுக்கு அப்பிரதட்சணமாக அனந்தாழ்வார் தோட்டத்திற்கு எழுந்தருளி, அங்கு அமைந்துள்ள மண்டபத்தில் ஆஸ்தானம் கண்டருளி பிறகு. மகிழ மரத்திற்கு மாலை, சடகோபம் போன்ற மரியாதைகளை அருளுகிறான்.
இதேபோல் அனந்தாழ்வார் பரமபதம் அடைந்த தினமான திருவாடிப்பூரத்தன்றும், இத்தோட்டத்திற்கு பகவான் எழுந்தருளி மகிழ மரத்திற்கு மாலை, சடகோபம் சாதித்து மரியாதைகளை அருளுகிறார்.
இந்நிகழ்விற்கு ஸ்ரீவாரி பாக் சவாரி உற்சவம் என்று பெயர். பாக் என்றால் தோட்டம், சவாரி என்றால் புறப்பாடு.