

திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 10-வதுநாளான நேற்று காலை 8.30 மணியளவில் தனித்தனி ஜனதா அம்பாரி வாகனங்களில் உற்சவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் புதுமண தம்பதியர் அலங்காரத்தில் கைலாசகிரி மலையை சுற்றி கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி நடந்தது.
இதையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் உற்சவர்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீப, தூபம் மற்றும் தீபாராதனை, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டது. தொடர்ந்து மேள, தாளங்கள் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் சென்று வாகனங்களில் அமர்த்தப்பட்டனர்.
பின்னர் சுவாமி-அம்பாள் கிரிவலம் புறப்பட்டனர். பஜார் வீதி, ஜெயராம் ராவ் வீதி வழியாக சென்ற சுவாமி-அம்பாளை பின்தொடர்ந்து கோவில் அதிகாரிகள், திரளான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். சுவாமி-அம்பாள் சுமார் 16 கிராமங்கள் வழியாக சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சுமார் 23 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட இந்த கிரிவலத்தை நிறைவு செய்த சுவாமி-அம்பாள், அங்கிருந்து புறப்பட்டு இரவு 10 மணியளவில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலை அடைந்தனர்.
சுவாமி-அம்பாள் கைலாசகிரி மலையை வலம் வரும் நிகழ்ச்சி ஆண்டுக்கு 2 முறை நடப்பது வழக்கம். ஒரு முறை மாட்டுப்பொங்கல் அன்றும், மற்றொரு முறை வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழாவின்போதும் நடக்கும்.
திருக்கல்யாண உற்சவங்களில் (ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் திருக்கல்யாணம், சபாபதி திருக்கல்யாணம்) பங்கேற்ற முப்பத்து முக்கோடி தேவர்கள், முனிவர்கள், ரிஷிகளை சிவபெருமானும் அம்பாளும் கைலாசகிரி மலை வரை சென்று வழியனுப்பி வைப்பதற்காக கிரிவலம் நடப்பதாக ஐதீகம்.
எதிர்சேவை நிகழ்ச்சி
கிரிவலம் செல்ல இயலாத பக்தர்கள் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் அருகில் உள்ள சுகப்பிரம்மாஸ்ரமத்துக்கு அருகிலுள்ள 16 கால் மண்டபம் அருகே காத்திருந்து கிரிவலம் சென்று திரும்பிய உற்சவர்களை வரவேற்று விழா நடத்தினர். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இதை, எதிர்சேவை நிகழ்ச்சி என்றும் பக்தர்கள் அழைக்கின்றனர்.
கிரிவலம் நிறைவடைந்ததும் இரவு 11 மணியளவில் குதிரை வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், சிம்ம வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.