சகலமும் அருளும் சக்தி வாய்ந்த மந்திரம்

சிவ வழிபாட்டின் ஜீவ நாடி ‘நமசிவாய’ என்னும் ஐந்தெழுத்து பஞ்சாட்சரமாகும்.
சிவபெருமானை வழிபட்டால் மங்களங்கள் அனைத்தும் கிடைக்கும், நமசிவாய மந்திரம்
நமசிவாய மந்திரம்
Published on

சிவம் என்னும் சொல் மங்களத்தை குறிப்பதாகும். சர்வ மங்களங்களையும் சகல சவுபாக்கியங்களையும் அளிக்க வல்லது சிவம். சிவம் என்றால் மங்களம், சைவம் என்றால் மங்களங்களை அளிக்க வல்ல ஒரு நெறி. சிவபெருமானை வழிபட்டால் மங்களங்கள் அனைத்தும் ஒரு சேரக் கிடைக்கும். சிவம் தான் சிவபெருமான். அதாவது நற்பலன்களை அளிக்க வல்ல திருவுருவமே சிவபெருமான்.

சிவ வழிபாடு என்பது வேத காலத்திற்கு முற்பட்டதாகும். வேதங்களிலே சிவபெருமானை பற்றி புகழ்ந்து பேசப்படுகிறது. சிவ வழிபாடு பக்தர்களின் இடர்கள் அனைத்தையும் களையவல்லது.

இப்படிப்பட்ட சிவ வழிபாட்டின் ஜீவ நாடி ‘நமசிவாய’ என்னும் ஐந்தெழுத்து பஞ்சாட்சரமாகும். ஐந்தெழுத்து மந்திரமாகிய ‘நமசிவாய‘ என்பதை யாரொருவர் சித்த சுத்தியோடு ஜபிக்கிறார்களோ, அவர்களுக்கு சகலமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஐந்தெழுத்து மந்திரத்தின் மகிமை

என்றும் பதினாறு என்று மார்க்கண்டேயரை சொல்கிறோம். அந்த மார்க்கண்டேயர் இந்த ஐந்தெழுத்து மந்திரத்தை ஜபித்துதான் எமனையே வென்றாராம். ராவணன் சிவபெருமானிடம் பெற்ற அருளுக்கெல்லாம் இந்த ஐந்தெழுத்து ஓதியதே காரணம். தீராத வயிற்று வலியால் திருநாவுக்கரசர் துடித்தாரே, அப்போது அவரது வலியை போக்கியது ஐந்தெழுத்து மந்திரம்தான். திருநீற்றிலே ஐந்தெழுத்தை ஓதி திலகவதியார் திருநாவுக்கரசரிடம் கொடுத்ததும், கோரமான வயிற்று வலி சாரம் இழந்து நீங்கியது.

இதேபோல சம்பந்தர் ஐந்தெழுத்தை ஓதிக்கொடுத்த திருநீற்றினால் தான் மதுரை பாண்டிய மன்னன் நோயும் அகன்றது. காரைக்கால் அம்மையார் கையாலயம் சென்றதும், நாயன்மார் பல பேர் பல அற்புதங்கள் நிகழ்த்தியதும் இந்த ஐந்தெழுத்தின் விந்தைதான்.

வேதந்தின் நடுநாயகம்

இப்படிப்பட்ட இந்த பஞ்சாட்சர மந்திரம் வேதத்தின் நடுநாயகமாக திகழ்கின்றது. இந்த பஞ்சாட்சரம்தான் பஞ்ச பூதங்களாக திகழ்கின்றது. பஞ்சபூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்ற இல்லாவிட்டால்கூட இந்த உலகமே இயங்காது. உலக இயக்கங்களின் நாடியே பஞ்சாட்சரம்தான். எனவே, பஞ்சாட்சரத்தை ஜபிக்கும்போது பஞ்ச பூதங்களையும் துதிக்கின்ற பலன் கிடைக்கும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com