திருவண்ணாமலை நவ கோபுர தரிசனம்

பாதி கட்டப்பட்ட நிலையில் இருந்த வடக்கு கோபுரத்தைக் கண்டு வருத்தம் அடைந்த அம்மணி அம்மாள், செல்வந்தர்கள் பலரிடம் நன்கொடை பெற்று, இந்த கோபுரத்தை கட்டி முடித்தார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கோபுரங்கள்
திருவண்ணாமலை கோபுரங்கள்
Published on: 

திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்திற்கு, 'நவ துவார பதி' என்ற பெயரும் உண்டு. 'ஒன்பது நுழைவு வாசல்களைக் கொண்ட நகரம்' என்பது இதன் பொருள். இங்கு அமைந்துள்ள 4 ராஜகோபுரங்கள், கட்டை கோபுரம் எனப்படும் 5 சிறிய கோபுரங்களை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.

1. ராஜகோபுரம்:

அண்ணாமலையார் ஆலயத்தின் பிரதான கோபுரம் இது. விஜயநகர மன்னனான கிருஷ்ண தேவராயர், 1550-ம் ஆண்டு இதற்கானப் பணியைத் தொடங்கினார். 135 அடி நீளம், 98 அடி அகலத்தில் கிழக்கு ராஜகோபுரத்திற்கு அடித்தளம் அமைக்கப்பட்டது. ஆனால் கோபுரம் கட்டும் பணிக்கு முன்பாகவே அவர் இறந்துவிட்டார். பாதியில் நின்ற அந்தப் பணியை, தஞ்சையை ஆண்ட செவ்வப்ப நாயக்கர் நிறைவுசெய்தார். 217 அடி உயரத்தில், 11 நிலைகளுடன் இந்த ராஜகோபுரம் அமைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் அமைந்த மிக உயரமான கோபுரங்களில், திருவண்ணாமலை கிழக்கு ராஜகோபுரம் 2-வது இடத்தில் உள்ளது.

2. பேய்க்கோபுரம்:

மேற்கு திசையில் கட்டப்பட்ட ராஜகோபுரம் இது. 160 அடி உயரம் கொண்ட இந்த ராஜகோபுரத்தை அமைக்கும் பணியை தொடங்கியதும், கிருஷ்ணதேவராயர் தான். ஆனால் இதன் பணியையும் செவ்வப்ப நாயக்கர்தான் முடித்தார். இந்த கோபுரத்திற்கு 'பேய்க்கோபுரம்' என்ற பெயரும் உண்டு.

3. திருமஞ்சன கோபுரம்:

தெற்கு திசையில் அமைந்துள்ள ராஜகோபுரம் இது. பழங்காலம் தொட்டே சுவாமிக்கு திருமஞ்சனம் செய்வதற்கான புனித நீரை, யானை மீது வைத்து இந்த வாசல் வழியாகத்தான் எடுத்து வருவது வழக்கம். எனவேதான் இதற்கு 'திருமஞ்சன கோபுரம்' என்று பெயர். 157 அடி உயரம் கொண்ட இந்த கோபுரம் எந்த நூற்றாண்டில் கட்டப்பட்டது, யாரால் கட்டப்பட்டது என்ற விவரங்கள் தெரியவில்லை. ஆனி திருமஞ்சனம், ஆருத்ரா தரிசனம் ஆகிய விழாக்களின்போது நடராஜர், இந்த வழியாகத்தான் வெளியே வந்து வீதிஉலா செல்வார்.

4. அம்மணி அம்மன் கோபுரம்:

வடக்கு ராஜகோபுரத்திற்கான பெயர் இது. சிறுவயது முதலே அண்ணாமலையார் மீது பக்திகொண்ட அம்மணி அம்மாள், சித்தரைப் போல வாழ்ந்தவர். நமசிவாய மந்திரம் உச்சரித்து, திருநீறு கொடுத்து பலரது நோயையும், பிரச்சினைகளையும் போக்கியவர். பாதி கட்டப்பட்ட நிலையில் இருந்த வடக்கு கோபுரத்தைக் கண்டு வருத்தம் அடைந்த இவர், செல்வந்தர்கள் பலரிடம் நன்கொடை பெற்று, இந்த கோபுரத்தை கட்டி முடித்தார். ஒரு செல்வந்தர், தன்னிடம் பணம் இல்லை என்று கூற, அவரிடம் இருந்த செல்வத்தின் அளவை துல்லியமாக கூறினார். இதையடுத்து அந்த செல்வந்தர் அதிக பொருள் வழங்கியதாகவும் சொல்கிறார்கள். இந்த கோபுரம், 171 அடி உயரம் கொண்டது.

கட்டை கோபுரங்கள்: திருவண்ணாமலையில் நான்கு வீதிகளிலும் அமைந்த ராஜகோபுரங்களுக்கு அடுத்ததாக உள்ளே அமைந்திருக்கும் 5 சிறிய கோபுரங்களும் கூட மிகவும் சிறப்புக்குரியவைதான்.

5.வல்லாள மகாராஜா கோபுரம்:

கிழக்கு ராஜகோபுரத்தை தாண்டி உள்ளே நுழைந்ததும் இருப்பது, இந்த கோபுரம். 1318-ம் ஆண்டு தொடங்கி 1340-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த கோபுரத்தை வீர வல்லாள மகாராஜா கட்டினார். 160 அடி உயரம் கொண்ட இந்த கோபுரம், 5 நிலைகளுடன் காணப்படும்.

6. கிளி கோபுரம்:

வல்லாள மகாராஜா கோபுரத்தைத் தாண்டியதும் இருக்கும் கோபுரம் இது. 81 அடி உயரம், 5 நிலைகளுடன் அமைந்த இந்த கோபுரத்தை 1053-ம் ஆண்டு ராஜேந்திரச் சோழன் கட்டியுள்ளார். திருவண்ணாமலை ஆலயத்தில் உள்ள கோபுரங்களில் இது மிகவும் பழமையானது. அருணகிரிநாதர் தற்கொலை செய்ய எண்ணி குதித்தது இந்த கோபுரத்தில் இருந்துதான். அவரை முருகப்பெருமான் காப்பாற்றி, திருப்புகழ் பாட வைத்தார். மன்னனின் உயிரைக் காக்க கிளியின் உடலில் தன் ஆவியை புகுத்திக் கொண்ட அருணகிரிநாதர், கிளி உருவத்திலேயே இருக்கும் நிலை ஏற்பட்டது. அந்த வடிவிலேயே இந்த கோபுரத்தில் இருந்து நிறைய பாடல்களை பாடியுள்ளார். அதனால்தான் அதற்கு 'கிளி கோபுரம்' என்று பெயர்.

7. தெற்கு கட்டை கோபுரம்:

திருமஞ்சன கோபுரத்திற்குள் நுழைந்ததும் உள்ளே அமைந்த 5 நிலைகளுடன் கூடிய சிறிய கோபுரம் இது. 70 அடி உயரம் கொண்டது.

8. மேற்கு கட்டை கோபுரம்:

பேய்க்கோபுரத்தின் வாயிலாக ஆலயத்திற்குள் நுழையும்போது வரும் சிறிய கோபுரம் இது. இதுவும் 5 நிலைகளுடன் 70 அடி உயரத்தில் அமைந்த கோபுரம்தான்.

9. வடக்கு கட்டை கோபுரம்:

அம்மணி அம்மாள் கோபுரத்தை அடுத்த ஆலயத்திற்குள் அமைந்த சிறிய கோபுரம் இது. இந்த கோபுரம் 45 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது.

X