ஆன்மிகத்தை அன்றாட வாழ்க்கையுடன் இணைக்கும் நவராத்திரி வழிபாடுகள்

சடங்குகள் மற்றும் வழிபாடுகளுடன் சேர்த்து மனதையும் சுத்தமாக வைத்துக்கொண்டால்தான் வழிபாடு முழுமையடையும்.
வழிபாடு
வழிபாடு
Published on: 

நவராத்திரி என்பது வெறும் சடங்குகளும் வழிபாடுகளும் மட்டும் நிறைந்த திருவிழா அல்ல; அது மனதைத் தூய்மைப்படுத்திக்கொள்ளக் கிடைத்த ஒரு பொன்னான வாய்ப்பு.

வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க..

ஒன்பது இரவுகள் கொண்டாடப்படும் நவராத்திரி விழாவில், அன்னை பராசக்தியை பல்வேறு வடிவங்களில் வழிபடுவது நமது மரபு.

வட இந்தியாவில் நவதுர்கையின் ஒன்பது வடிவங்களை வழிபடும் வழக்கம் இருப்பதுபோல, தமிழகத்தில் முதல் மூன்று நாட்கள் துர்கை, அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி, இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி என முப்பெரும் தேவியரை வணங்கும் வழக்கம் உள்ளது. இந்த வழிபாட்டோடு சேர்த்து, நம் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான நற்குணங்களையும் வளர்த்துக்கொண்டால், வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாறும்.

வழிபாடு முழுமை அடைய..

இறுதி மூன்று நாட்கள் கல்விக்கு அதிபதியான அன்னை சரஸ்வதி தேவிக்குரியவை என்பதால், புத்தகங்களையும் தொழில் கருவிகளையும் வைத்து வழிபடும் அதேவேளையில், தினமும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

நல்ல புத்தகங்களைப் படிப்பதும், புதிய திறன்களை வளர்த்துக்கொள்வதும் சிந்தனையைத் தெளிவாக்கும். அறிவோடு பணிவும் சேர்ந்தால்தான் பெருமை தரும். எனவே, பிறர் சொல்வதைப் பொறுமையாகக் கேட்கும் பண்பையும், தமது தவறுகளைத் திருத்திக்கொள்ளும் மனப்பக்குவத்தையும் இந்த நாட்களில் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

சடங்குகளும் வழிபாடுகளும் நமது கலாச்சாரத்தின் மிக முக்கியமான பகுதிகள். ஆனால், அவற்றுடன் சேர்த்து நம் மனதையும் சுத்தமாக வைத்துக்கொண்டால்தான் வழிபாடு முழுமையடையும். கோவிலுக்குச் செல்வது, கொலு வைப்பது, சுண்டல் படைப்பது போன்றவை நம்மை இறைவனுடன் சேர்க்கும் வழிகள்.

அதேபோல, இறை நம்பிக்கையுடன் தினமும் நல்ல குணங்களோடு வாழ்வது, அந்த இறைவனுக்கு நாம் செய்யும் உண்மையான பூஜையாகும். சுருக்கமாக சொல்லப்போனால், ஆன்மிகத்தை அன்றாட வாழ்க்கையோடு இணைப்பதே நவராத்திரி வழிபாட்டின் நோக்கமாகும்.

குறைகளை திருத்திக்கொள்ளுங்கள்

நவராத்திரி நாட்களில் தேவியை வழிபடுவதோடு மட்டுமல்லாமல் தம்மிடம் இருக்கும் சிறு சிறு குறைகளையும் திருத்திக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும். எண்ணங்கள் தூய்மையாக இருந்தால், செயல்களும் நன்மையாகவே முடியும். சிறிய மாற்றங்கள்தான் பெரிய வெற்றிகளுக்கு அடித்தளமாக அமைகின்றன என்பதை உணர்ந்து செயல்படவேண்டும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com