பம்பையில் உடனடி தரிசன முன்பதிவு மையம் தொடங்கும் எண்ணம் இல்லை: தேவஸ்தானம் தகவல்

சபரிமலையில் பெண்கள், குழந்தைகளுக்கு தனி வரிசையில் செல்ல வசதி செய்யப்பட்டு உள்ளது.
பம்பையில் உடனடி தரிசன முன்பதிவு மையம் தொடங்கும் எண்ணம் இல்லை: தேவஸ்தானம் தகவல்
Published on: 

சபரிமலை,

சபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைன், உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் தினசரி 85 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஆன்லைன் முன்பதிவு செய்த பக்தர்களில் பலர் தரிசனத்திற்கு வராததால் சபரிமலையில் பக்தர்கள் வருகை குறைந்துள்ளது.

அதாவது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது சுமார் 1 லட்சம் பக்தர்கள் வருகை குறைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சுற்றுலா ஏஜென்சிகளின் ஒட்டு மொத்த முன்பதிவே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஏ.டி.ஜி.பி. விஜயன் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் ஆன்லைன் முன்பதிவின்படி பக்தர்களின் வருகை குறைவாக இருப்பதால் உடனடி தரிசனத்திற்கான முன்பதிவு எண்ணிக்கையை அதிகரிக்க தேவஸ்தான ஊழியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. மேலும் கடந்த ஆண்டை போல் பம்பையிலும் முன்பதிவு மையத்தை தொடங்க அந்த சங்கம் சார்பில் முதல்-மந்திரி வி.டி. சதீசன், தேவஸ்தான துறை மந்திரி முரளீதரன் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ள னர்.

திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் ஜெயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தற்போது நிலக்கல், எருமேலி, செங்கன்னூர் மற்றும் வண்டிப் பெரியார் சத்திரம் ஆகிய இடங்களில் உடனடி தரிசனத்திற் கான முன்பதிவு நடந்து வருகிறது. ஆன்லைன் முன்பதிவு செய்த பக்தர்களின் வருகை குறைந்து வரும் நிலை நீடித் தால் உடனடி தரிசன முன்பதிவு எண்ணிக்கை 14 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரமாக உயர்த்தப்படும்.

ஆனால் பம்பையில் உடனடி தரிசன முன்பதிவு மையம் தொடங்கும் எண்ணம் இல்லை. அதற்கு பதிலாக நிலக்கல், எருமேலி, செங்கன்னூர் மற்றும் வண்டிப்பெரியார் சத்திரம் ஆகிய இடங்களில் உடனடி தரிசன முன்பதிவு மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். மேலும் டிசம்பர் மாதம் பக்தர்களின் வருகையை பொறுத்து ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கை 80 ஆயிரமாகவும், உடனடி தரிசன முன்பதிவு எண்ணிக்கை 20 ஆயிரமாகவும் அதிகரிக்க ஐகோர்ட்டு அனுமதியுடன் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சபரிமலையில் பெண்கள், குழந்தைகளுக்கு தனி வரிசையில் செல்ல வசதி செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் டோலியை பயன்படுத்தும் அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக புதிய கட்டண விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டு உள்ளது. அதன்படி 80 கிலோ வரையிலான பக்தர்களுக்கு ரூ.4,250, 81-100 கிலோ வரையிலான பக்தர்களுக்கு ரூ.5,250, 100 கிலோவுக்கு மேல் உள்ள பக்தர்களுக்கு ரூ.6,250 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

X