

பரமத்திவேலூர்,
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் நடைபெற்ற அபிஷேகத்தைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல் பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பரமேஸ்வரி அம்மன், மாசாணியம்மன், அரசாயி அருள்பாலித்தனர். கோப்பணம்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
அதேபோல் பரமத்தியில் உள்ள அங்காளம்மன், பரமத்திவேலூரில் உள்ள மகா மாரியம்மன், பேட்டையில் உள்ள புதுமாரியம்மன், பகவதி அம்மன், கரூர் மெயின் ரோட்டில் உள்ள செல்லாண்டியம்மன், நன்செய் இடையாறு மகா மாரியம்மன் காவிரி ஆற்றங்கரை அருகே உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பணசாமி கோவில், ராஜா சுவாமி, பாண்டமங்கலம் மாரியம்மன், பகவதி அம்மன், கொந்தளம் மாரியம்மன், சேளூர் மாரியம்மன், அய்யம்பாளையம் மாரியம்மன், பகவதி அம்மன், ஆனங்கூர் மாரியம்மன், வடகரையாத்தூர் மாரியம்மன்
மற்றும் பொத்தனூர் மேற்கு வண்ணாந்துறையில் எழுந்தருளியுள்ள ஏரி கருப்பண்ணசாமி, பொத்தனூரில் உள்ள பச்சமலை முருகன், கபிலர் மலை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், பிலிக்கல்பாளையம் கரட்டூர் விஜயகிரி வடபழனி ஆண்டவர், மற்றும் வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன், முருகன் மற்றும் குல தெய்வ கோவில்களில் பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.