

திருச்சி,
தமிழகத்தில் உள்ள அம்மன் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலாகும். இந்த கோவிலில் உள்ள அம்மனை வேண்டினால் நினைத்தது நடக்கும், செல்வம் பெருகும், குடும்பத்தில் அமைதி நிலவும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. உலக நன்மைக்காகவும், பக்தர்கள் நோய் நொடியின்றி வாழவும், அவர்களின் குடும்பம் செழிக்கவும் வேண்டி இக்கோவிலில் மாசி மாதம் கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாதம் கடைசி ஞாயிறு வரை பூச்சொரிதல் நடைபெறும்.
இந்த விழாக்காலங்களில் மரபு மாறி தன்னைத்தானே வருத்திக்கொண்டு பக்தர்களுக்காக 28 நாட்கள் அம்மனே பச்சைப் பட்டினி விரதம் இருப்பது இக்கோவிலின் தனிச் சிறப்பு. இந்த நாட்களில் அம்மனுக்கு அரிசி, துள்ளுமாவு, இளநீர் மட்டுமே நைவேத்தியம் செய்யப்படுகிறது.
இந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து அம்மனை தரிசனம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்ரையாகவும், வாகனங்களிலும் வந்து சென்றனர்.
பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் மஞ்சள் உடை உடுத்தி, கடும் விரதமிருந்து பாதயாத்திரையாக வருகின்றனர். கோவிலில் உள்ள தெப்பக்குளத்தில் புனித நீராடி அலகு குத்தியும், காவடி எடுத்தும், அக்னி சட்டி ஏந்தியும், பால்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து வந்தும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது நடந்து சென்று தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
இதன் தொடர்ச்சியாக சித்திரை மாதம் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டின் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று காலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கேடயத்தில் புறப்பாடாகி கொடிமரம் முன்பு எழுந்தருளினார். தொடர்ந்து சிவாச்சாரியார்களால் வேத மந்திரங்கள் முழங்க கோயிலின் உள்பிரகாரத்தில் உள்ள தங்க கொடிரத்திற்க்கும், அஸ்திர தேவர்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று மந்திரங்கள், மேளதாளங்கள் முழங்க மாரியம்மன் படம் தாங்கிய கொடியினை கொடிமரத்தில் ஏற்றினர்.
விழா நாட்களில் தினமும் காலையில் அம்மன் பல்லக்கில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து அருள்பாலித்தார். இரவில் தினமும் அம்மன் சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம் யானை, சேஷா, மரக்குதிரை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். நேற்று இரவு அம்மன் வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட விழா இன்று நடைபெற்றது. இதற்காக காலை 10.3 மணிக்குள் மேல் அம்மன் தேரில் எழுந்தருளி திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். திருத்தேரில் ஆடி அசைந்து வந்த மாரியம்மனை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருத்தேருக்கு முன்னால் பக்தர்கள் கரகம் எடுத்தும், முளைப்பாரி எடுத்தும், அலகு குத்தியும், பறவைக் காவடி எடுத்தும் ஊர்வலமாக வந்தனர்.
தேரோட்டத்தை முன்னிட்டு பக்தர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். இதனால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி, சமயபுரம் மாரியம்மன் கோவில் மண்டபத்தில் தற்காலிக போலீஸ் நிலையம் அமைக்கப்பட்டு இருந்தது. கூட்ட நெரிசலில் சிக்கி அவதிப்படும் பக்தர்களை மீட்கும் வகையில் சமயபுரம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய அதிகாரி மற்றும் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தேரோட்டத்தை முன்னிட்டு பல்வேறு அமைப்புகளின் சார்பாக தண்ணீர் பந்தல் அமைத்து நீர்மோர், பானகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ச.கண்ணனூர் பேரூராட்சி நிர்வாகம் செய்திருந்தது.