“அகந்தை இல்லா ஆன்மிகம்..” கடவுளுக்கு பிடித்தமான குணம் இது

கர்த்தருக்குப் பயப்படுதல் என்பது கடவுளின் மீது ஆழ்ந்த பக்தியும், அவர் காட்டும் வேதத்தின் வழியில் நடப்பதும் ஆகும்.
இயேசு கிறிஸ்து, வேதாகம தகவல்கள்
இயேசு கிறிஸ்து
Published on

அகந்தை, தற்பெருமை இல்லாத உன்னதமான பண்பானது, ஆன்மீகத்திலும், மனித உறவுகளிலும் மிகவும் போற்றப்படும் நற்குணம் ஆகும்.

நாம் வாழும் இடத்தில், சமூகத்தில், அன்றாடம் பலவிதமான மனிதர்களிடம் பழகிக் கொண்டிருப்போம். அவர்களில் ஒருசில மனிதர்கள் எப்போதும் அவர்களைப் பற்றி உயர்வாகவும், அல்லது அவர்களின் தனிப்பட்ட சாதனைகளைப் பற்றி பெருமையாகவும், சக மனிதர்களைப் பற்றி தாழ்வாகவும் பேசிக்கொள்வதை பார்த்திருப்போம். வேதாகமம் இதைப் பற்றி என்ன கூறுகிறது என்பதைப் பார்ப்போம்.

இயேசு கிறிஸ்து வாழ்ந்த காலத்தில் தம்முடைய சீடர்களிடத்தில் அனேக காரியங்கள் பற்றி உவமைகளாக கூறி வந்தார். ஒரு சமயம் தங்களை நீதிமான்கள் என்று நம்பி மற்ற மனிதர்களை அற்பமாக எண்ணும் சில மனிதர்கள் குறித்து உவமையாக இயேசு பேசினார்.

இரண்டு மனிதர்கள் ஜெபம் செய்வதற்காக ஆலயத்துக்குப் போனார்கள். அதில் ஒரு மனிதன் யூத மதத்தின் கண்டிப்பான சட்டதிட்டங்கள், சடங்குகளை கடைப்பிடிக்கும் பரிசேயன். இன்னொரு மனிதன் அரசாங்க வரிகளை வசூலிக்கும் வேலையை செய்யும் ஆயக்காரன்.

ஆயக்காரரின் வேண்டுதல்

அவர்களில் பரிசேயன் தேவனை நோக்கி; 'நான் மற்ற மனிதர்களைப் போல, பணத்துக்கு ஆசைப்பட்டவன் அல்ல, அநியாயம் செய்பவன் அல்ல, விபச்சாரம் செய்பவன் அல்ல, வரி வசூலிக்கும் வேலையைச் செய்யும் இந்த ஆயக்காரனைப் போலவும் அல்ல. நான் வாரத்தில் இரண்டு முறை உபவாசம் (பட்டினி) இருக்கிறேன், என்னுடைய வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை ஆலயத்திற்கு காணிக்கையாக செலுத்தி வருகிறேன்' என்று தன் தற்பெருமையை ஜெபமாக கடவுளிடம் கூறினான்.

வரி வசூலிக்கும் வேலையை செய்யும் ஆயக்காரன் ஆலயத்துக்கு பின்னால் நின்று, தன் கண்களை வானத்தை நோக்கி கூட பார்க்க துணிவில்லாமல், தன் மார்பிலே அடித்துக் கொண்டு, 'தேவனே! பாவியாகிய என் மேல் அன்பாய் இரும்' என்று மிகுந்த மனத்தாழ்மையுடன் வேண்டினான்.

இயேசுவின் போதனை

இயேசு தன்னுடைய சீடர்களைப் பார்த்து, “பரிசேயன் அல்ல, வரி வசூலிக்கும் வேலை செய்யும் ஆயக்காரனே நீதிமானாக்கப்பட்டு தன் வீட்டுக்கு திரும்பி சென்றான். தற்பெருமை கொண்ட பரிசேயனின் வேண்டுதல் ஏற்கப்படவில்லை, தன் பாவத்தை உணர்ந்து தன்னைத் தாழ்த்திய ஆயக்காரனின் வேண்டுதலை கடவுள் ஏற்றுக் கொண்டார்" என்று போதித்தார். ஏனெனில் 'தன்னை உயர்த்துகிறவன் எவனும் தாழ்த்தப்படுவான், தன்னை தாழ்த்துகிறவன் எவனும் உயர்த்தப்படுவான்' என்றார்.

“தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியம், மகிமையும், ஜீவனுமாம் (நீதிமொழிகள் 22:4)”

கர்த்தருக்கு பயப்படுதல்

தாழ்மை என்பது, நான் என்ற ஆணவம், அகந்தை இவற்றை விலக்கி, இறைவனுக்கு முன்பும், மனிதருக்கு முன்பும் பணிவாக நடப்பது. கர்த்தருக்குப் பயப்படுதல் என்பது கடவுளின் மீது ஆழ்ந்த பக்தியும், அவர் காட்டும் வேதத்தின் வழியில் நடப்பதும் ஆகும். இந்த இரண்டு நற்பண்புகளையும் கடைப்பிடிக்கும்போது, அதற்கான பலனாகக் கடவுள் மூன்று ஆசீர்வாதங்களைத் தருகிறார். அவை:

1) ஐசுவரியம்: நிறைவான செல்வமும், குறைவில்லாத வாழ்வும்,

2) மகிமை: சமூகத்தில் நல்ல பெயரும், மதிப்பும், புகழும்,

3) ஜீவன்: பரிபூரணமான ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும், நித்திய ஜீவனும் ஆகும்.

தாழ்மைப்படுங்கள்..

தாழ்மையுள்ளவர்களுக்கு தேவன் இரங்குகிறார், பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், ஆனால் தேவனுடைய வார்த்தைக்கு தன்னைத் தாழ்த்தி கீழ்ப்படிகிறவர்களுக்கு தமது கிருபையையும் இரக்கத்தையும் பரிசாகத் தருகிறார். விசுவாசிகள் தங்களின் சுய பலத்தை நம்பாமல், தேவனிடம் முழுமையாக ஒப்படைக்கும்போது அவர் நிச்சயமாக உயர்த்துவார்.

"கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்” (யாக்கோபு 4:10), ஆமேன்.

-டாக்டர் ஒய்.ஆர்.மானெக்சா, நெல்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com