ஸ்ரீரங்கம் ஊஞ்சல் உற்சவம்.. நெல்லளவு கண்டருளிய நம்பெருமாள்

ஊஞ்சல் உற்சவ விழாவில் நாளை காலை சந்திர புஷ்கரணியில் நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளுகிறார்.
ஸ்ரீரங்கம் ஊஞ்சல் உற்சவ விழா: நெல்லளவு கண்டருளிய நம்பெருமாள்
நெல்லளவு கண்டருளிய நம்பெருமாள்
Published on: 

ஸ்ரீரங்கம்,

ஸ்ரீரங்கத்தில் நடைபெற்று வரும் ஊஞ்சல் உற்சவ விழாவின் முக்கிய நிகழ்வாக, நேற்று சுவாமி நம்பெருமாள் நெல்லளவு கண்டருளினார்.

ஊஞ்சல் உற்சவம்

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் 28.10.2026 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முதல் நாளில் நம்பெருமாள், உபய நாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு அலங்காரத்தைத் தொடர்ந்து ஊஞ்சல் சேவை நடைபெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருளிய நம்பெருமாளுக்கு இருபுறமும் வெண்சாமரம் வீசப்பட்டது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அடுத்தடுத்த நாட்களில் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து தனித்துப் புறப்பட்டு, ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

நெல்லளவு கண்டருளுதல்

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான நெல்லளவு கண்டருளுதல், 7-ம் திருநாளான நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் திருக்கொட்டாரத்தில் எழுந்தருளினார். நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து தாயார் சன்னதியில் திருவந்திக்காப்பும், பின்னர் ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் சேவையும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பகவானை தரிசனம் செய்தனர்.

8-ம் திருநாளான இன்று (புதன்கிழமை) மாலை 5.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, மாலை 6 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அலங்காரத்தைத் தொடர்ந்து இரவு 7.15 மணி முதல் 8.15 மணி வரை ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. பின்னர் நம்பெருமாள் புறப்பாடாகி மூலஸ்தானத்தைச் சென்றடைகிறார்.

தீர்த்தவாரி

விழாவின் நிறைவு நாளான நாளை (வியாழக்கிழமை) காலை 9.45 மணியளவில் சந்திர புஷ்கரணியில் நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளுகிறார். தொடர்ந்து ஊஞ்சல் மண்டபத்தில் திருமஞ்சனம் நடைபெறுகிறது. மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஊஞ்சல் சேவை நடைபெறுகிறது. பின்னர் நம்பெருமாள் மூலஸ்தானம் திரும்புவதுடன் இந்த ஆண்டுக்கான ஊஞ்சல் உற்சவம் நிறைவடைகிறது.

X