ஊஞ்சல் உற்சவம் நிறைவு நாள்... ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தீர்த்தவாரி

விழாவின் நிறைவு நாளான இன்று மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஊஞ்சல் சேவை நடைபெறுகிறது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தீர்த்தவாரி நடைபெற்றது
தீர்த்தவாரி
Published on: 

ஸ்ரீரங்கம்,

ஸ்ரீரங்கத்தில் நடைபெற்று வரும் ஊஞ்சல் உற்சவ விழாவின் நிறைவு நாளான இன்று சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி நடைபெற்றது.

ஊஞ்சல் உற்சவம்

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் கடந்த 28-ந்தேதி தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின் முதல் நாளில் நம்பெருமாள், உபய நாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு அலங்காரத்தைத் தொடர்ந்து ஊஞ்சல் சேவை நடைபெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருளிய நம்பெருமாளுக்கு இருபுறமும் வெண்சாமரம் வீசப்பட்டது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நெல்லளவு

அடுத்தடுத்த நாட்களில் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து தனித்துப் புறப்பட்டு, ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான நெல்லளவு கண்டருளுதல், 7-ம் திருநாளில் நடைபெற்றது. அதன்பின் தாயார் சன்னதியில் திருவந்திக்காப்பும், ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் சேவையும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பகவானை தரிசனம் செய்தனர்.

ஊஞ்சல் உற்சவத்தின் 8ம் நாளான நேற்று (04.11.2026) மாலை, நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி, ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளி சிறப்பு அலங்காரம் கண்டு ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

தீர்த்தவாரி

விழாவின் நிறைவு நாளான இன்று காலையில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதற்காக நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி, சந்திரபுஷ்கரணி தெப்பக்குளத்தில் சாளக்கிராம மாலையுடன் எழுந்தருள, சின்ன பெருமாள் எனப்படும் தீர்த்தபேரர் தீர்த்தவாரி கண்டருளினார். இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

இன்று மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஊஞ்சல் சேவை நடைபெறுகிறது. பின்னர் நம்பெருமாள் மூலஸ்தானம் திரும்புவதுடன் இந்த ஆண்டுக்கான ஊஞ்சல் உற்சவம் நிறைவடைகிறது.

சின்ன பெருமாள்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் நம்பெருமாள் உற்ங்களின்போது (ஊஞ்சல் உற்சவம் போன்ற விழாக்களில்), நடைபெறும் தீர்த்தவாரி நிகழ்ச்சியில், நம்பெருமாளுக்குப் பதிலாக அவரது பிரதிநிதியாக தீர்த்தபேரர் (சின்னபெருமாள்) எழுந்தருளி சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருள்வார். நம்பெருமாள் கரையில் நின்றவாறு தீர்த்தபேரர் தீர்த்தவாரியை (நீராடுவதை) கண்டருள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

X