ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம்

விழா நாட்களில் தினமும் உற்சவர் நம்பெருமாள், மூலஸ்தானத்தில் இருந்து புறப்படாகி ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சலில் ஆடியபடி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம்
Published on: 

ஸ்ரீரங்கம்,

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஊஞ்சல் உற்சவம் 9 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம் நேற்று முன்தினம் (28.10.2026) தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. நவம்பர் 5-ம் தேதி வரை ஊஞ்சல் உற்சவ விழா நடைபெறும்.

ஊஞ்சலில் ஆடியபடி அருள்பாலித்த நம்பெருமாள்

முதல் நாள் மாலை நம்பெருமாள், உபய நாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடாகி கொடிமரம் அருகில் உள்ள ஊஞ்சல் மண்டபத்திற்கு வந்தார். அங்கு சிறப்பு அலங்காரம் கண்டு, உபய நாச்சியார்களுடன் ஊஞ்சலில் ஆடியபடியே பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இரண்டாம் நாளான நேற்று (29.10.2026) மாலை, நம்பெருமாள், மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடாகி ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளி, சிறப்பு அலங்காரம் கண்டு ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு சேவை சாதித்தார். ஊஞ்சல் சேவை நிறைவுபெற்றபின், நம்பெருமாள் அங்கிருந்து இரவு 9.15 மணிக்கு புறப்பாடாகி இரவு 9.30 மணியளவில் மூலஸ்தானம் சென்றடைந்தார். இந்நிகழ்வு காரணமாக இரவு 8 மணிக்கு மேல் மூலவர் சேவை ரத்து செய்யப்பட்டது.

நெல்லளவு

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, 7-ம் நாளான 3.11.2026 அன்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு, கொட்டார வாசலில் நெல்லளவு கண்டருளிய பின்னர், இரவு 6.45 மணிக்கு தாயார் சன்னதியில் திருவந்திக்காப்பு கண்டருளுகிறார்.

அதன்பின் ஊஞ்சல் மண்டபத்தில் இரவு 8.30 மணிமுதல் இரவு 9.30 மணிவரை ஊஞ்சல் உற்சவம் கண்டருளுகிறார். பின்னர் அங்கிருந்து நம்பெருமாள் இரவு 10.15 மணிக்கு புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு மூலஸ்தானத்திற்கு சென்றடைகிறார். இந்நிகழ்வை முன்னிட்டு இரவு 9 மணிக்கு மேல் மூலவர் சேவை ரத்து செய்யப்படும்.

தீர்த்தவாரி

விழாவின் நிறைவு நாளான 5.11.2026 காலை 9.45 மணியளவில் நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளுகிறார். அதன்பின் 10.15 மணியளவில் ஊஞ்சல் மண்டபத்தை அடைந்து, திருமஞ்சனம் கண்டருளுகிறார். மதியம் 2 மணியளவில் அலங்காரம் செய்து நைவேத்தியம் செய்யப்படுகிறது. மாலை 6 மணி முதல் 8 மணி வரை ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. அதன்பின் ஊஞ்சல் மண்டபத்தில் இருந்து சுவாமி புறப்பாடாகி படிப்பு கண்டருளி இரவு 9.45 மணியளவில் மூலஸ்தானம் சேருகிறார். அன்றைய தினம் 8 மணிக்கு மேல் மூலவர் சேவை ரத்து செய்யப்படும்.

ஸ்ரீவில்லிபுத்துார்

இதேபோல் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் 7 நாட்கள் நடக்கும் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம் நேற்று தொடங்கியது.

நேற்று மாலை 6:45 மணிக்கு கோயில் தெற்கு பிரகாரத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் ஊஞ்சலில் எழுந்தருளினர். கோயில் பட்டர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் திருவாய்மொழி சேவகாலம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நவம்டபர் 4-ம் தேதி வரை ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.

X