

திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் உள்ள உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இதில் ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும்.
இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோவிலில் பக்தர்கள் ராஜகோபுரம் வழியாகவும், அம்மணி அம்மன் கோபுரம் அருகில் அமைக்கப்பட்டு உள்ள காத்திருப்பு கூடத்தின் வழியாகவும் தரிசனத்திற்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
பொது தரிசன வழியில் சென்ற பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய சுமார் 3 மணி நேரம் ஆனதாக தெரிவித்தனர்.
பகலில் திருவண்ணாமலையில் வெயில் சுட்டெரித்தது. எனவே வரிசையில் சென்ற பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வெயிலின் தாக்கம் தணிக்க தயிர், மோர் வழங்கப்பட்டது. மேலும் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் காணப்பட்டனர்.