கபிலேஸ்வரர் கோவிலில் சண்டி யாகம் நிறைவு

கபிலேஸ்வர சுவாமிக்கு கலச ஸ்தாபனம், விசேஷ பூஜைகள், ஜபம், ஹோமம், நிவேதனம் மற்றும் ஆரத்தி உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் சண்டி யாகம், மகா பூர்ணாஹுதி
சண்டி யாகம், மகா பூர்ணாஹுதி
Published on: 

திருப்பதி,

உலக நலனுக்காகவும், பக்தர்களின் நல்வாழ்வுக்காகவும், திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோவிலில் ஒரு மாத காலம் கார்த்திகை ஹோம மகோற்சவம் நடத்தப்படும். அவ்வகையில் இந்த ஆண்டின் ஹோம மகோற்சவம் நடைபெற்று வருகிறது. நவக்கிரக ஹோமம், தட்சிணாமூர்த்தி சுவாமி ஹோமம், காலபைரவர் ஹோமத்தை தொடர்ந்து 9 நாள் நடைபெறும் காமாட்சி அம்மன் சண்டி யாகம் கடந்த 18-ம் தேதி தொடங்கியது.

சண்டி யாகம் நிறைவு

தினமும் சிறப்பு பூஜைகள், தினசரி ஹோமம், சண்டி ஹோமம் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் ஹோமத்தில் பங்கேற்று தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பாரம்பரிய உடைகள் மற்றும் அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது. சண்டி பாராயணம், சஹஸ்ர நாமார்ச்சனை நடத்தப்பட்டன.

காமாட்சி அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த சண்டி யாகம் நேற்றுடன் நிறைவடைந்தது. நேற்று காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை யாகசாலையில் பல்வேறு வேத சடங்குகள் நடைபெற்றன. இதில் சண்டி ஹோம சமாப்தி, மஹா பூர்ணாஹுதி, கலச உத்வாஸனம், மகா அபிஷேகம் மற்றும் மூலவருக்கு கலசாபிஷேகம் ஆகியவை, சாஸ்திர விதிமுறைகளின்படி நடத்தப்பட்டன.

மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை, கபிலேஸ்வர சுவாமிக்கு கலச ஸ்தாபனம், விசேஷ பூஜைகள், ஜபம், ஹோமம், நிவேதனம் (உணவு படைத்தல்) மற்றும் ஆரத்தி உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ருத்ர யாகம்

இந்த நிகழ்வில், கோவில் துணை நிர்வாக அதிகாரி நாகரத்னா, உதவி நிர்வாக அதிகாரி குமாரி தேவி, கண்காணிப்பாளர் சந்திரசேகர், அர்ச்சகர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

ஹோம மகோற்சவத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் டிசம்பர் 6-ந்தேதி வரை ருத்ர யாகம் நடக்கிறது. இந்த ஹோமத்தில் பங்கேற்கும் பக்தர்கள் வஸ்திரங்களும், அன்னப்பிரசாதமும் வழங்கப்படுகிறது. யாகத்தில் தம்பதியர் ரூ.500 கட்டணம் செலுத்தி பங்கேற்கலாம்.

X