இயேசுவின் சீடர்கள் பெற்ற ‘உயிர்ப்பு அனுபவம்’

இயேசுவின் சீடர்களின் உள்மனப் பயணத்தை புரிந்து கொண்டால், அது 'உயிர்ப்பு அனுபவம்' பெற உதவும்.
உயிர்ப்பு அனுபவம்
உயிர்ப்பு அனுபவம்
Published on

ஒருமுறை இயேசுவின் சீடர்களான, பேதுருவையும் யோவானையும் யூத காவலர்கள் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இவர்களை விசாரித்துவிட்டு, அதற்குமேல் அவர்கள் இயேசுவைப் பற்றி எதுவும் பேசவோ, கற்பிக்கவோ கூடாது என்று தலைமைச் சங்கத்தார் ஆணையிட்டனர்.

ஆனால், இவர்கள், 'நாங்கள் கடவுளுக்குக் கீழ்படிவதா? உங்களுக்குக் கீழ்படிவதா? நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமலிருக்க எங்களால் முடியாது என்று துணிவோடு பதிலளித்தனர். (தி.ப. 4:1-22) உண்மையில் இயேசுவின் சீடர்கள் அத்தகைய துணிச்சல் மிகுந்தவர்களா என்றால், இல்லை எனலாம். இதே பேதுரு, இயேசு கைது செய்யப்படும்போது இயேசுவை மும்முறை 'தெரியாது' என மறுதலிப்பார் என முன்னறிவிக்கப்பட்டு (மத் 26:34), அதே போல் மறுதலிக்கவும் செய்தார். (மத் 26:69-75)

உயிருக்குப் பயந்து மறுதலித்த, இயேசுவை நிர்கதியாக விட்டுவிட்டுச் சென்ற சீடர்கள், பின்பு எப்படி இத்தனைத் துணிச்சல் மிகுந்தவர்களாக யூதத் தலைமை சங்கத்தின் முன் பதில் அளிக்க முடிந்தது? அதற்குக் காரணம், அவர்கள் பெற்ற உயிர்ப்பு அனுபவமே.

சீடர்கள் பெற்ற அனுபவம்

இயேசு தன் சீடர்களோடு வாழ்ந்த காலகட்டத்தில், அவர்களுக்குப் பல்வேறு வாழ்வியல் பாடங்களையும், அன்பின் கூறுகளையும் கற்பித்திருந்தாலும், மிக முக்கியமாக அவர்களை, தனது இறப்பிற்காக தீவிரமாக ஆயத்தப்படுத்தியிருந்தார். தான் உயிரோடு இருந்த காலத்திலேயே, தான் எத்தகைய சாவை எதிர்கொள்ளப் போகிறேன் என்பதை அவர்களுக்குக் தெளிவாக மூன்று முறை எடுத்துக் கூறியிருந்தார். வெறும் இறப்பை மட்டும் அல்ல, தன் உயிர்ப்பையும் அவர்களுக்கு முன்னுரைத்திருந்தார்.

இயேசு கூறியது போல் அவர் இறந்தவுடன் அவர் கூறியது நினைவில் வராத சீடர்கள், சிதறிப்போயினர். ஆனால், அவர் கூறியது போலவே மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தபோது, அவர் மீதான நம்பிக்கை அவர்களுக்கு முழுமை பெறுகிறது.

இயேசுவின் வார்த்தைகள், எப்போது செயலாக்கம் பெற்றனவோ, எப்போது அவருடைய வார்த்தைக்கும் வாழ்வுக்கும் இடைவெளி இல்லை என சீடர்கள் அறிந்து கொண்டனரோ, அப்போது அவர்கள் இயேசுவின் உயிர்ப்பு அனுபவம் பெற்றவர்களாய், அவருக்காக எதையும் செய்யும் துணிவைப் பெற்றனர்.

உயிர்ப்பு அனுபவம் என்றால் என்ன?

21-ம் நூற்றாண்டில், இயேசுவின் சீடர்களைப் போல அவருடன் வாழ்ந்து, அவரின் போதனைகளைக் கேட்டு, அவரது இறப்பையும் உயிர்ப்பையும் கண்ணால் கண்டு உயிர்ப்பு அனுபவம் பெறுகின்ற வாய்ப்பு மிகவும் அரிது.

இங்கு 'உயிர்ப்பு அனுபவம்' வெறும் நிகழ்வாகப் பார்த்தால், அது சாத்தியமில்லாதது போன்றே தோன்றும். அதே நேரத்தில், அதை ஒரு தனிமனிதரின் உள்மனப் பயணமாகப் பார்த்தால் நிச்சயம் சாத்தியம் என்றே தோன்றும்.

சீடர்களின் உள்மனப் பயணத்தை, புரிந்து கொண்டால், அது 'உயிர்ப்பு அனுபவம்' பெற உதவும் என நம்புகின்றேன். அவர்களின் உள்மனப் பயணத்தை மூன்று படிநிலைகளாகப் புரிந்து கொள்ளலாம். 1) உள்ளுணர்வற்ற மந்த நிலை, 2) கேள்விகள் நிறைந்த குழப்பமான நிலை, 3) தெளிவு பெற்றத் தீர்க்கமான நிலை.

அன்று இயேசு, எத்தனையோ ஆழமான ஆன்மிக கருத்துகளையும், மானுடவியல் கருத்துகளையும் தனது இறப்பு மற்றும் உயிர்ப்பு பற்றிக் கூறியிருந்தாலும், அதன் முக்கியத்துவத்தை உணர தகுந்த நிலையில் சீடர்கள் இல்லை, இது முதல் நிலை. நம் வாழ்விலும், நாம் பல நேரங்களில் இத்தகைய நிலையிலேயே இருக்கின்றோம்.

இயேசுவின் இறப்பு என்ற நிகழ்வு அவர்களை இரண்டாம் நிலை நோக்கி நகர்த்தியது. நமக்கு இதுவும் பல நேரங்களில் நடந்திருக்கலாம். நம் வாழ்வின் ஏதோ ஒரு நிகழ்வு நம்மை சற்று அசைத்துப் பார்த்திருக்கலாம். இங்குதான் நம்மில் பலர் தடுமாறிவிடுகின்றோம். சீடர்களும் தடுமாறினர், பேதுரு தன் மீன்பிடித் தொழிலுக்கே மீண்டும் செல்ல முயன்றார். மீன் இன்றி திரும்பிய அவர்களை, கரையில் சந்தித்த உயிர்த்த இயேசு அவர்களுக்காக உணவு தயாரித்து காத்துகொண்டிருந்தபோது, இயேசுவை அடையாளம் கண்டுகொண்டார். (யோவா 21:3-13)

மேற்கூறிய நிகழ்வு, 'இயேசு இறைமகன்' என்ற தெளிவை சீடர்களுக்குத் தந்தது. நம்மில் பலர், இந்த இரண்டாம் நிலையில் இருக்கும் குழப்பத்தின்போது நம் உள்ளத்தின் அடி ஆழத்தில் இருந்து இறைவனின் மெல்லிய குரலாய் ஒலிக்கும் சரியான தீர்வுகளை கவனிக்கத் தவறிவிடுகின்றோம்.

இது, நாம் உயிர்ப்பு அனுபவம் பெற வழிகாட்டும் மூன்றாம் நிலைக்கு செல்லத் தடையாகிறது.

எப்போதெல்லாம் வாழ்வின் குழப்பநிலையில் இருக்கின்றோமோ, அப்போதெல்லாம் 'நான் உயிர்ப்பு அனுபவத்தின் மிக அருகில் இருக்கின்றேன்' என்ற தெளிவோடு சற்று நிதானித்து முடிவுகளை எடுக்கும்போது நாமும் 'உயிர்ப்பு அனுபவம்' பெறுவது சாத்தியமே.

இயேசுவின் இறப்பிற்குப் பிறகு சிதறிப்போன சீடர்கள், உயிர்ப்பு அனுபவத்திற்குப்பின் எவ்வாறு துணிவோடு செயல்பட்டார்களோ, அதே போல நாம் எந்த நிலையில் இருந்தாலும், அதைக் கடந்து தனித்துவம் மிக்கவர்களாய் வாழ்வது அவசியம்.

-இ. பிரவின் குமார், சென்னை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com