திருநாங்கூரில் 54 ஆண்டுகளுக்கு பிறகு தெப்ப உற்சவம்

தெப்பத் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளையும் மாமுனிகளையும் தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் திருநாங்கூர் திருவன்புருஷோத்தம பெருமாள் கோவிலில் தெப்ப உற்சவம்
தெப்ப உற்சவம்
Published on

சீர்காழி,

திருநாங்கூர் பெருமாள் கோவிலில் 54 ஆண்டுகளுக்குப் பிறகு 7 நாள் தெப்ப உற்சவம் கோலாகலமாக தொடங்கியது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருநாங்கூரில் திருவன்புருஷோத்தம பெருமாள் கோவிலில் உள்ள தனித் சன்னதியில் மணவாள மாமுனிகள் எழுந்தருளியுள்ளார். அவரது 656வது திருநட்சத்திர நாளை முன்னிட்டு தெப்ப உற்சவம் நேற்று தொடங்கியது.

திருநாங்கூர் ஏழு கோவில் ஆதீனத்திற்கு உட்பட்ட 7 திவ்ய தேச பெருமாள்களில், தினம் ஒரு பெருமாள் என மணவாள மாமுனிகளுடன் சேர்ந்து எழுந்தருள, திருப்பாற்கடலில் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

திருப்பாற்கடல்

முதல் நாளான நேற்று திருவன் புருஷோத்தம பெருமாள், மணவாள மாமுனிகள் சன்னதியில் எழுந்தருளினார். அவரை மணவாள மாமுனிகள் மங்களாசாசனம் செய்த பின், அவருக்கு பெருமாள் பகுமான மரியாதை முடிந்து திருவந்திகாப்பு நடைபெற்றது. இரவு கோவிலில் இருந்து பெருமாள் மாமுனிகளுடன் வீதியுலாவாக சென்று திருப்பாற்கடலில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளியதும், தெப்ப உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளையும் மாமுனிகளையும் தரிசனம் செய்தனர். 54 ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கிய இந்த தெப்ப உற்சவம் 7 நாட்கள் நடைபெறும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com