

அரியலூர்:
அரியலூர் மாவட்டம், திருமழபாடி வைத்தியநாதசுவாமி ஆலயத்தில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் நந்தியெம்பெருமான் திருக்கல்யாண விழா விமரிசையாக நடைபெறும். சிவபெருமான் முன்னின்று நடத்தும் இந்தத் திருக்கல்யாணத்தைக் கண்டால், திருமணமாகாதவர்களுக்கு திருமணத் தடைகள் நீங்கி, விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. நந்தி கல்யாணம் கண்டால் முந்திக் கல்யாணம் என்று பெரியோர்கள் சொல்வார்கள்.
அவ்வகையில், இந்த ஆண்டு நந்தியெம்பெருமான்-சுயசாம்பிகை தேவி திருக்கல்யாணம் மார்ச் 27-ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் விமரிசையாக நடைபெற உள்ளது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்வார்கள். குறிப்பாக திருமண தடை உள்ளவர்கள், திருக்கல்யாண கோலத்தை தரிசனம் செய்து வேண்டிக்கொள்வார்கள். திருமணம் விரைவில் நடக்கவும், சகல தோஷங்கள் நிவர்த்தி ஆகவும் அன்றைய தினம் நந்தியெம்பெருமானிடம் வேண்டிக்கொண்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
திருக்கல்யாண தினத்தில் பக்தர்களின் பெயரில் அர்ச்சனை செய்து பிரசாதம் வழங்கப்படுகிறது. இதற்காக 300 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
கோவிலின் வங்கிக் கணக்கில் நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாகவோ 300 ரூபாய் செலுத்தி, ரசீது பெற்று அந்த ரசீதுடன் அவரவர் பெயர், நட்சத்திரம், முகவரி ஆகியவற்றுடன் கோவில் முகவரிக்கு தபால் அனுப்ப வேண்டும். மணியார்டர் மூலமாகவும் பணம் செலுத்தி தகவலை அனுப்பலாம். அவ்வாறு அனுப்பி வைப்பவர்களுக்கு அவர்களின் பெயர்களில் அர்ச்சனை செய்து பிரசாதம் அவர்களின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு கோவிலின் தொலைபேசி எண்ணில் (04329243282) தொடர்பு கொள்ளலாம்.