

திருவண்ணாமலை,
உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, ரூ. 3.5 லட்சம் மதிப்பிலான 12 திருக்குடைகள் மற்றும் 2 மயில் விசிறிகள் பக்தர்களால் இன்று காணிக்கையாக வழங்கப்பட்டன.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், 2026-ம் ஆண்டிற்கான திருக்கார்த்திகை தீபத் திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்க உள்ளது. இதையொட்டி, திருவண்ணாமலை நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
தீபத் திருவிழாவின் போது நடைபெறும் பஞ்சமூர்த்திகள் வீதி உலா மற்றும் தேரோட்டத்திற்குப் பயன்படுத்துவதற்காக, பக்தர்கள் சார்பில் 12 புதிய திருக்குடைகளும், 2 மயில் விசிறிகளும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருந்தன. சுமார் 3.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான இந்த திருக்குடைகள் மற்றும் மயில் விசிறிகள், இன்று (சனிக்கிழமை) மாடவீதிகள் வழியாக மேளதாளங்கள் மற்றும் கயிலாய வாத்தியங்கள் முழங்கியும், சிலர் கடவுள்களின் வேடம் தரித்து நடனமாடியும் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன.
ஊர்வலத்தின் முடிவில், இவை அனைத்தும் கோவில் நிர்வாகத்திடம் முறைப்படி காணிக்கையாக ஒப்படைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு "அண்ணாமலையாருக்கு அரோகரா" என பக்தி முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தேரோட்டம் வரும் 21-ம் தேதியும், சிகர நிகழ்ச்சியான மகா தீபம் வரும் 24-ம் தேதியும் மலை உச்சியில் ஏற்றப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.