திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் தெப்ப உற்சவம் நிறைவு

நிறைவு நாளில் தெப்பத்தில் எழுந்தருளிய பத்மாவதி தாயார் 7 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் தெப்பத்திருவிழா
திருச்சானூர் தெப்ப உற்சவம்
Published on

திருப்பதி,

திருச்சானூரில் உள்ள பிரசித்தி பெற்ற பத்மாவதி தாயார் கோவிலில் தெப்பத்திருவிழா நிறைவு பெற்றது.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஆண்டுதோறும் தெப்பத்திருவிழா 5 நாட்கள் விமரிசையாக நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டின் தெப்பத்திருவிழா கடந்த 25-ம் தேதி தொடங்கியது. கோவில் தெப்பக்குளமான பத்ம சரோவரத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தெப்பத்தில், உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி தெப்பக்குளத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

முதல் நாளில் ருக்மிணி, சத்யபாமாவுடன் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தெப்பத்தில் எழுந்தருளி மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரண்டாம் நாளில் சுந்தராஜ சுவாமி தெப்பத்தில் வலம் வந்தார். மூன்றாவது மற்றும் நான்காவது நாளில் பத்மாவதி தாயார் தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் தெப்பத்திருவிழா நிறைவு, கருட சேவை
கருட வாகனத்தில் தாயார் வீதியுலா

பத்மாவதி தாயார்

விழாவின் நிறைவு நாளான நேற்று பத்மாவதி தாயார், சிறப்பு அலங்காரத்துடன் தெப்பத்தில் எழுந்தருளி 7 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தெப்பக்குளத்தின் நான்கு புறமும் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள், இந்த கண்கொள்ளா காட்சியை கண்டு தரிசனம் செய்தனர். முன்னதாக சிறப்பு அபிஷேகம், சகஸ்ரநாமார்ச்சனை மற்றும் ஊஞ்சல் சேவை நடைபெற்றது.

கருட வாகனம்

தெப்பத்தில் பவனி வந்த தாயார், பின்னர் கருட வாகனத்தில் எழுந்தருளி, நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்வுடடன் தெப்ப உற்சவம் நிறைவுபெற்றது.

விழாவில் திருமலை திருப்பதி தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி டாக்டர் ஏ.ஷரத், துணை நிர்வாக அதிகாரி ஹரிந்திரநாத், கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள், ஸ்ரீவாரி சேவகர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com