பிரம்மோற்சவ விழா: சூரிய பிரபை, சந்திர பிரபை வாகனங்களில் கோதண்டராமர் வீதிஉலா

சூரிய பிரபை வாகன சேவையைத் தொடர்ந்து உற்சவர்களான சீதா-லட்சுமண சமேத ராமச்சந்திர மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது.
சூரிய பிரபை, சந்திர பிரபை வாகனத்தில் கோதண்டராமர்
சூரிய பிரபை, சந்திர பிரபை வாகனத்தில் கோதண்டராமர்
Published on

திருப்பதி,

திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 7-வதுநாளான நேற்று காலை 8 மணியளவில் சூரிய பிரபை வாகன வீதிஉலா நடந்தது.

சூரியன் அனைத்து ஆற்றல்களுக்கும் ஆதாரமாகவும், பிணிகளை போக்குபவராகவும், இயற்கைக்கும் உயிரினங்களுக்கும் உயிரோட்டம் அளிப்பவராகவும் போற்றப்படுகிறார். மழைப் பொழிவு, தாவரங்களின் வளர்ச்சி என அனைத்தும் சூரியனின் ஒளியாலேயே நடக்கின்றன.

எனவே சூரியனை போற்றும் வகையில் உற்சவர் கோதண்டராமர் சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சந்திர பிரபை வாகனத்தில் கோதண்டராமர் எழுந்தருளிய காட்சி
சந்திர பிரபை வாகனத்தில் கோதண்டராமர் எழுந்தருளிய காட்சி

அதைத்தொடர்ந்து காலை 10.30 மணியில் இருந்து 11.30 மணி வரை உற்சவர்களான சீதா-லட்சுமண சமேத ராமச்சந்திர மூர்த்திக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர், பன்னீர் போன்றவற்றால் அபிஷேகமும், பலவண்ணமலர்களால் அலங்காரமும் செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சிகளில் திருமலை பெரிய ஜீயர் சுவாமிகள், கோவில் துணை அதிகாரி நாகரத்தினா, சூப்பிரண்டு முனிசங்கர், ஆய்வாளர் சுரேஷ் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் இரவு 7 மணியில் இருந்து 8 மணிவரை சந்திர பிரபை வாகனத்தில் உற்சவர் கோதண்டராமர் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7.30 மணியில் இருந்து 8.30 மணிவரை தேரோட்டம் நடைபெற்றது. இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரை குதிரை வாகன வீதிஉலா நடக்கிறது.

Also Read
சென்னை கபாலீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழா தொடங்கியது
சூரிய பிரபை, சந்திர பிரபை வாகனத்தில் கோதண்டராமர்
X

Daily Thanthi
www.dailythanthi.com