

திருப்பதி,
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் ஆகஸ்ட் 7-ந்தேதியில் இருந்து 10-ந்தேதி வரை விமரிசையாக நடக்கிறது. இதற்கான போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
திருப்பதியில் அமைந்துள்ள கோதண்டராமர் கோவிலில் ஆண்டுதோறும் 4 நாட்கள் பவித்ரோற்சவம் நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டின் பவித்ரோற்சவம், அடுத்த மாதம் (ஆகஸ்டு) 7-ம் தேதி முதல் 10-ம்தேதி வரை நடக்கின்றது.
அதையொட்டி திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் முத்தாடா. ரவிச்சந்திரா திருப்பதியில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் பவித்ரோற்சவம் சம்பந்தமான நிகழ்ச்சி நிரல் அச்சிடப்பட்ட போஸ்டர், விளக்கக் கையேடுகளை வெளியிட்டார்.
விழாவின் தொடக்க நாளான ஆகஸ்டு 7-ந்தேதி வேத முறைப்படி மேதினி பூஜை, மிருத்சங்கிரஹணம், அங்குரார்ப்பணம் உள்ளிட்ட சடங்குகளுடன் பவித்ரோற்சவம் தொடங்குகிறது. தினசரி பூஜைகள், வழிபாடுகளில் பங்கேற்கும் அதிகாரிகள், அர்ச்சகர்கள், பக்தர்கள் தெரிந்தோ, தெரியாமலோ செய்த தோஷ நிவர்த்திக்காகவும், கோவிலின் புனிதத் தன்மையை நிலைநிறுத்தவும் ஆண்டுதோறும் பவித்ரோற்சவம் நடத்தப்படுகிறது.
3 நாள் உற்சவங்களில் பவித்ர பிரதிஷ்டை, பவித்ர சமர்ப்பணம், வேத ஹோமங்கள், ஸ்நாபன திருமஞ்சனம், கோவிலின் நான்கு மாடவீதிகளில் உற்சவர்கள் உலா ஆகியவை நடக்கின்றன. நிறைவு நாளில் பூர்ணாஹுதியோடு பவித்ரோற்சவம் நிறைவடைகிறது. பவித்ரோற்சவத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு மேல்துண்டு, ஜாக்கெட் துணி, பவித்ரம் பிரசாதமாக வழங்கப்படும்.
பவித்ரோற்சவ நாட்களில் திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் இந்து தர்ம பிரசார பரிஷத், அன்னமாச்சாரியா திட்டம் சார்பில் தினமும் ஆன்மிக சொற்பொழிவுகள், பக்தி இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
போஸ்டர் வெளியிடும் நிகழ்ச்சியில் தேவஸ்தான இணை அதிகாரி சரத், துணை அதிகாரி நாகரத்னா, கண்காணிப்பாளர் சீனிவாசுலு ரெட்டி, கோவில் ஆய்வாளர் சுரேஷ்பாபு மற்றும் அர்ச்சகர்கள், பிற அதிகாரிகள் கலந்து கொண்டனர்.