

திருப்பதி, ஆக.9-
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் நடைபெற்று வருகிறது.
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் ஆண்டு முழுவதும் நடக்கும் தினசரி பூஜைகள், வழிபாடுகள் மற்றும் உற்சவங்களின்போது கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள், சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தெரிந்தும், தெரியாமலும் செய்த தவறுகளால் ஏற்படும் தோஷத்தை நிவர்த்தி செய்து, கோவிலின் புனித தன்மையைப் பாதுகாக்கும் வகையில் ஆகம விதிகளின்படி ஆண்டுதோறும் பவித்ரோற்சவம் நடத்தப்படுகிறது.
அவ்வகையில் இந்த ஆண்டுக்கான பவித்ரோற்சவம் நேற்று ஆகம சம்பிரதாய முறைப்படி கோலாகலமாக தொடங்கியது. உற்சவத்தின் ஒரு பகுதியாக உற்சவ மூர்த்திகளான சீதா, ராமர் மற்றும் லட்சுமணர் நேற்று காலை விமானப் பிரகாரத்தைச் சுற்றி வலம் வந்து யாக சாலையில் எழுந்தருளினர்.
தொடர்ந்து பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள் மற்றும் இளநீர் ஆகியவற்றால் உற்சவ மூர்த்திகளான சீதா, ராமர், லட்சுமணருக்கு ஸ்நாபன திருமஞ்சனம், அலங்காரம், பூஜை செய்யப்பட்டது. பின்னர் சாற்று முறை, ஆஸ்தானம் நடந்தது. மாலையில் உற்சவர்களான சீதா, ராமர், லட்சுமணர் தங்கத் திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இரவு பவித்ர பிரதிஷ்டை, சயனாதிவாசம் உள்பட பல்வேறு வேத சடங்குகள் நடந்தன.
உற்சவத்தில் கோவில் துணை அலுவலர் நாகரத்னா, கண்காணிப்பாளர் சீனிவாசுலு ரெட்டி, கோவில் ஆய்வாளர் சுரேஷ் பாபு மற்றும் அர்ச்சகர்கள், ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பவித்ரோற்சவத்தின் 2-வது நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை பவித்ர மாலைகள் சமர்ப்பணம் நடைபெற்றது. மாலை யாகசாலையில் சிறப்பு வேத சடங்குகள் நடக்கின்றன.