

திருவண்ணாமலை.
திருவண்ணாமலையில் நேற்று தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. விநாயகர், முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளின் தேர்கள் தனித்தனியாக இழுக்கப்பட்டன.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் காலையில் விநாயகர் மற்றும் அம்பாளுடன் சந்திரசேகரரும், இரவில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோரும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
விழாவின் 7-ம் நாளான நேற்று பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடைபெற்றது. விநாயகர் முருகர் உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளின் தேர்கள் தனித்தனியாக இழுக்கப்பட்டன.
இதற்காக தேர்கள் வஸ்திரங்கள் மற்றும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. நேற்று அதிகாலையில் கோவிலில் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க பஞ்சமூர்த்திகள் தேரில் எழுந்தளினர்.
காலை சுமார் 7.05 மணியளவில் விநாயகர் தேர் மங்கள வாத்தியங்கள் முழங்க பக்தர்களால் இழுக்கப்பட்டது. காலை 9.40 மணியளவில் தேர் நிலையை வந்தடைந்தது. அதைத்தொடர்ந்து 10.50 மணியளவில் முருகர் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.
பிற்பகல் அருணாசலேஸ்வரர் மகா ரதம் இழுக்கப்பட்டது. பெண்கள் ஒருபுறமும், ஆண்கள் ஒருபுறமும் தேரின் வடம் பிடித்து இழுப்பதற்காக தயார் நிலையில் நின்றனர். பிற்பகல் 3.10 மணியளவில் சிறப்பு பூஜைக்கு பின்னர் மகா ரதம் எனப்படும் பெரிய தேர் இழுக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என்ற பக்தி கோஷத்துடன் மங்கள வாத்தியங்கள் முழங்க வடம் பிடித்து தேர் இழுத்தனர். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனால் மாடவீதி முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. பக்தர்கள் வெள்ளத்தில் பெரிய தேர் அசைந்தாடியபடி சென்றது. விழாவில் ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் கரும்புத் தொட்டில் கட்டி அதில் குழந்தைகளை வைத்து சுமந்து சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பெரிய தேர் நிலைக்கு வந்ததும் இரவு பராசக்தி அம்மன் தேர் இழுக்கப்பட்டது. இந்த தேரை பெண்கள் மட்டும் இழுத்தனர். அதைத் தொடர்ந்து சண்டிகேஸ்வரர் தேர் இழுக்கப்பட்டது. சண்டிகேஸ்வரர் தேரை சிறுவர், சிறுமியர்கள் இழுத்தனர்.
கார்த்திகை தீபத் திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு கிராமங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதனால் திருவண்ணாமலையில் உள்ள மடங்கள், சத்திரங்கள். தங்கும் விடுதிகள் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி காணப்பட்டது.
விழாவின் சிகர நிகழ்வாக வருகிற 24-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. மகா தீபத்தை காண வருகிற 24-ந் தேதி சுமார் 50 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.