திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா.. குதிரை வாகன வீதி உலா.. பிரம்மாவுக்கு நன்றி தெரிவித்த சந்திரசேகரர்

கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
கார்த்திகை தீபத் திருவிழா, அருணாசலேஸ்வரர் தேர் முன்பாக குதிரை வாகனத்தில் எழுந்தருளிய சந்திரசேகரர், தேரோட்டியான பிரம்மாவுக்கு நன்றி தெரிவித்த அற்புதமான காட்சி.
அருணாசலேஸ்வரர் தேர் முன்பாக குதிரை வாகனத்தில் எழுந்தருளிய சந்திரசேகரர், தேரோட்டியான பிரம்மாவுக்கு நன்றி தெரிவித்த காட்சி.
Published on: 

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவின் 8-ம் திருநாளான நேற்று குதிரை வாகனங்களில் விநாயகரும், சந்திரசேகரரும் வீதி உலா வந்தனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. காலையில் விநாயகர் தேரும், அதனைத்தொடர்ந்து முருகர் தேரும் மாட வீதிகளை வலம் வந்தது. தொடர்ந்து மாலை சுமார் 3 மணியளவில் பெரிய தேரோன அருணாசலேஸ்வரரின் மகா ரதம் மாட வீதிகளில் பவனி வந்தது. இந்த தேர் மாட வீதியை சுற்றி இரவு சுமார் 11 மணியளவில் நிலையை வந்தடைந்தது.

அதைத்தொடர்ந்து இரவு 11.15 மணி அளவில் பராசக்தி அம்மன் தேர் வீதியுலா வந்தது. இந்த தேரை பெண்கள் மட்டுமே இழுத்தனர். தொடர்ந்து சிறுவர், சிறுமிகள் சண்டிகேஸ்வரர் தேரை இழுத்து வந்தனர். பராசக்தி அம்மன் தேர் அதிகாலை சுமார் 3 மணியளவில் நிலையை வந்து அடைந்தது. சண்டிகேஸ்வரர் தேரும் அதனைத்தொடர்ந்து நிலையை வந்து அடைந்தது.

8-ம் நாள் விழா

தொடர்ந்து 8-ம் நாள் விழாவான நேற்று காலை 11 மணியளவில் குதிரை வாகனங்களில் விநாயகரும், அம்பாளுடன் சந்திரசேகரரும் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க விநாயகரும், அம்பாளுடன் சந்திரசேகரரும் குதிரை வாகனங்களில் மாடவீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

சாமி வீதி உலாவின் போது பக்தர்கள் தங்களின் வீடுகளின் அருகே சாமி வந்ததும் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். முன்னதாக தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சந்திரசேகரர், அருணாசலேஸ்வரர் தேர் முன்பாக நின்று தேரோட்டியான பிரம்மாவிற்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியும், திரிபுர தகனம் பூஜைகளும் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு தீபாராதனை நடந்தது.

பிச்சாண்டவர் உற்சவம்

மாலை 4.30 மணியளவில் தங்கமேருவில் பிச்சாண்டவர் உற்சவம் நடந்தது. பிச்சாண்டவர் உற்வசத்தின்போது உண்டியலில் காணிக்கை செலுத்தினால் வியாபாரம் விருத்தியாகி செல்வம் பெருகும் என்பது ஐதீகம். ஆகையால் பிச்சாண்டவர் மாடவீதியில் உலா வந்தபோது திரளான பொதுமக்கள், வியாபாரிகள் உண்டியலில் காணிக்கை செலுத்தினர்.

பிச்சாண்டவர் மாட வீதியில் உள்ள காந்தி சிலை அருகில் வந்ததும், வாணவேடிக்கை நடைபெற்றது. பின்னர் பிச்சாண்டவர் கோவிலுக்கு சென்ற பின்னர் பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் குதிரை வாகனத்தில் மாடவீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

மகா தீபம்

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதற்கு பயன்படுத்தப்படும் காடா துணிகள் மாடவீதியை சுற்றி கொண்டு வரப்பட்டு கோவிலில் பூஜை செய்யப்பட்டது. மகா தீபத்திருவிழாவிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் கோவிலில் பரத நாட்டிய நிகழ்ச்சிகள், சொற்பொழிவு போன்றவை நடைபெறுகின்றன.

X