

திருப்பதி,
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் ராமநவமி விழா விமரிசையக நடந்தது. ராம நவமி தினத்தன்று அதிகாலை சுப்ரபாதத்தில் மூலவர்களை துயிலெழுப்பி அபிஷேகம் செய்யப்பட்டது. காலை 8 மணியில் இருந்து 9 மணி வரை ஊஞ்சல் மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளான சீதா, ராமர், லட்சுமணர், அனுமனுக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள் மற்றும் சந்தன கலவையால் ஸ்நாபன திருமஞ்சனம் செய்யப்பட்டது.
தொடர்ந்து மாலை 3 மணியில் இருந்து 4 மணி வரை பெரிய ஜீயர் சுவாமியின் மடத்தைச் சேர்ந்த அர்ச்சகர்கள் புதிய வஸ்திரங்களை ஊர்வலமாக எடுத்துக்கொண்டு கோவிலை சுற்றி வலம் வந்து (விமான பிரதட்சணம்) மூலவர்களுக்கும், உற்சவ மூர்த்திகளுக்கும் சமர்ப்பித்தனர்.
அதைத்தொடர்ந்து ராம ஜன்ம புராண பாராயணமும், மாலை 3 மணியளவில் ராமநவமி ஆஸ்தானமும் நடத்தப்பட்டது. இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை உற்சவர் கோதண்டராமர் அனுமன் வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
ராமநவமியையொட்டி நேற்று சீதா-ராமர் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. முன்னதாக காலை உற்சவர்களான சீதா, லட்சுமணர் சமேத கோதண்டராமருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து முத்துமாலைகள் ஊர்வலம் நடத்தப்பட்டது. முதலில் தேவஸ்தான நிர்வாக கட்டிடத்தில் உள்ள கருவூலப் பிரிவில் அதிகாரிகள் முத்து மாலைகளுக்கு சிறப்புப்பூஜைகள் நடத்தினர்.
பின்னர் முத்துமாலைகளை யானைகள் மீது வைத்து ஊர்வலமாகக் கொண்டு வந்து கோவிலின் பிரதான அர்ச்சகர் ஆனந்தகுமார் தீட்சிதரிடம் வழங்கினர். அதன்பிறகு அம்பாரியில் வைத்து முத்துமாலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
இந்த ஊர்வலம் தீர்த்தக்கட்ட வீதி, காந்தி ரோடு, கோவிந்தராஜர் கோவில் தெற்கு மாட வீதி, பஜார் வீதி வழியாக கோவிலை அடைந்தது. அதன்பிறகு மாலை 6 மணியில் இருந்து இரவு 9 மணிவரை சீதா-ராமர் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
இந்நிகழ்ச்சிகளில் கோவில் துணை அதிகாரி நாகரத்னா, கோவில் ஆய்வாளர் சுரேஷ் மற்றும் பிற அதிகாரிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.