நீட் தேர்வுக்கு தயார் செய்வது எப்படி?

நீட் தேர்வுக்கு தயார் செய்வது எப்படி எனபது குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.
நீட் தேர்வுக்கு தயார் செய்வது எப்படி?
Published on

மருத்துவப் படிப்பில் பட்டப்படிப்புகளான - எம்.பி.பி.எஸ் (MBBS), பி.டி.எஸ் (BDS), பி.ஏ.எம்.எஸ் (BAMS), பி.யு.எம்.எஸ் (BUMS) மற்றும் பி.ஹெச்.எம்.எஸ்(BHMS) போன்ற படிப்புகளில் சேர விரும்புபவர்கள் கண்டிப்பாக “நீட் தேர்வு” (NEET EXAM) எழுத வேண்டும்.

“நீட்” (NEET) எனப்படும் "நேஷனல் எலிஜிபிலிட்டி கம் என்ட்ரன்ஸ் எக்ஸாமினேஷன்" (NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE EXAMINATION) என்னும் இந்தத்தேர்வில் வெற்றி பெறுவது மிகவும் எளிதாகும். இதனால், ஆண்டுதோறும் இந்தத் தேர்வை எழுதுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே வருகிறது.

2023ஆம் ஆண்டு நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் 20,87,462 மாணவ, மாணவிகள். ஆனால், 20,38,596 பேர் மட்டுமே இந்தத் தேர்வை எழுதினார்கள். 2024ஆம் ஆண்டில் 24,06,079 மாணவ, மாணவிகள் இந்தத்தேர்வு எழுத விண்ணப்பித்தார்கள். ஆனால், 2025ஆம் ஆண்டு 22,76,069 மாணவ, மாணவிகள் மட்டுமே இந்தத் தேர்வை எழுத விண்ணப்பித்திருந்தார்கள்.

இலட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் எழுதும் இந்த நீட் தேர்வில் வெற்றி பெற ‘நன்கு திட்டமிட்ட வியூகம்’ மற்றும் ‘தொடர் முயற்சி’ கண்டிப்பாகத் தேவை. ஏனென்றால், கடுமையான போட்டி நிலவும் இந்தத் தேர்வின் பாடத்திட்டம் (Syllabus) விரிவான ஒன்றாகும். எனவே, இந்த நீட் தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்ள தெளிவான நேர மேலாண்மையை கடைபிடிக்க வேண்டும். மேலும், பாடம் சம்பந்தப்பட்ட முக்கியமான கருத்துக்களை மனதில் நிறுத்த தொடர் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். தேர்வுக்கான பாடத்திட்டத்திலுள்ள எல்லா தலைப்புகளையும் தெளிவாகப் புரிந்துகொண்டு, கேட்கும் கேள்விகளுக்கு ஏற்ப பதில் எழுத கற்றுக்கொள்ள வேண்டும்.

Also Read
நீட் தேர்வுக்கான பாடத்திட்டம் - முழு விவரம்
நீட் தேர்வுக்கு தயார் செய்வது எப்படி?

தெளிவான தயாரிப்பு (PREPARATION)

2026 ஆம் ஆண்டு நீட் தேர்வு எழுத இருப்பவர்கள் கருத்தில்கொள்ள வேண்டிய சில முக்கியமான குறிப்புகள் :

1.நீட் தேர்வு முறையைபற்றி (Exam Pattern)தெரிந்துகொள்ளுங்கள்.

நீட் தேர்வு எவ்வாறு நடத்தப்படும் என்பதைப் பற்றிய விவரங்களை முதலிலேயே தெரிந்துகொள்வது நல்லது. குறிப்பாக, தேர்வில் இடம்பெறும் மொத்த கேள்விகள் எத்தனை? அதில், இயற்பியல் (Physics) தேர்வில் எத்தனை கேள்விகள் இடம்பெறும். வேதியியல் (Chemistry) பாடத்தில் இடம்பெறும் மொத்த கேள்விகள் எத்தனை?

தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகிய பாடங்களில் கேட்கப்படும் கேள்விகள் மொத்தம் எத்தனை? என்றும் தெரிந்துகொள் வேண்டும். பொதுவாக இயற்பியல் பாடத்தில் 45 கேள்விகளும், வேதியியல் பாடத்தில் 45 கேள்விகளும், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களில் 90 கேள்விகளும் இடம்பெறும்.

ஒவ்வொரு கேள்விக்கும் 4 மதிப்பெண்ககள் வழங்கப்படும். தவறான விடைகளுக்கு 1 மதிப்பெண்கள் குறைக்கப்படும். இந்த அடிப்படை விவரங்களை தெரிந்துகொண்டால், தேர்வில் இடம்பெறும் எல்லா பாடங்களையும் தெளிவாகப் படிக்க வேண்டும் என்பதை புரிந்துகொள்ளலாம்.

அதுமட்டுமல்லாமல் தேர்வு நாட்களில் எந்தவித குழப்பமும் இல்லாமல் தெள்ளத்தெளிவாக, துல்லியமாக விடைகளை எழுதும் திறமையை வளர்த்துக்கொள்ளலாம்.

2.பாடத்திட்டம் பற்றி புரிந்துகொள்ளுங்கள்

தேர்வில் இடம்பெறும் பாடங்கள் பற்றி தெளிவாக புரிந்துகொண்டால், பாடங்களை படிப்பது மிகவும் எளிதாகும். இந்தத் தேர்வு எழுதுபவர்களில் சிலர் பிளஸ் 2 தேர்வில் இடம்பெறும் பாடங்களை மட்டும் படித்தால் போதும் என நினைக்கிறார்கள். ஆனால், பிளஸ் 1 தேர்வில் இடம்பெறும் பாடங்களையும் புரிந்துகொண்டு தேர்வுக்கு தயார்செய்வது நல்லது.

3.முக்கியப் பாடங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்

எல்லா பாடங்களையும் தெளிவாகப் படித்து மனதில் நிறுத்திக்கொள்வது சற்று கடினமான செயலாகும். இதனால், எந்தப் பாடத்திற்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? என்ற நுணுக்கங்களையும் கற்றுக்கொள்ளுங்கள். அப்போதுதான், மிகக்குறைந்த நேரத்தில் நிறைய பாடம் சம்பந்தப்பட்ட தகவல்களை சேகரித்து, நெஞ்சில் நிறுத்திக்கொள்ள இயலும். இதன்மூலம், தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறலாம். மேலும், பாடங்களை எளிதான முறையில் படிக்கலாம்.

4. நேர மேலாண்மை செய்துகொள்ளுங்கள் (Time Management)

பொதுவாக நீட் தேர்வுக்கு தயார் செய்பவர்கள் “நேர மேலாண்மை” பற்றி தெரிந்துகொள்வது மிகவும் சிறந்ததாகும். எந்த நேரத்தில் எவ்வளவு பாடங்களை படித்து முடிக்க வேண்டும் என்பதைப்பற்றி சிந்தித்து படிப்புக்காக ஒரு குறிக்கோளை நிர்ணயித்துகொள்ள வேண்டும். அந்த குறிக்கோள் நிறைவேற்றகூடிய குறிக்கோளாக அமைய வேண்டும்.

உதாரணமாக, “ஒரு நாளைக்கு 8 மணிநேரம் ஒதுக்கி நீட் தேர்வுக்காக படிப்பேன்” என ஒரு குறிக்கோளை நிர்ணயம் செய்துகொண்டார் என வைத்துக்கொள்வோம். இந்தக் குறிக்கோளை நிர்ணயிப்பதற்குமுன்பே ஒரு நாளைக்கு 8 மணி நேரத்தை முதலில் நீட் தேர்வுக்காக ஒதுக்க முடியுமா? என்று தீவிரமாக சிந்திக்க வேண்டும். அப்போதுதான் அந்த குறிக்கோளை அடைவதற்கு தடையாக இருக்கும் சூழல்களைப்பற்றி ஆராய இயலும்.

ஒரு நாளில் நீட் தேர்வின் தயாரிப்புக்கு எவ்வளவு நேரம் ஒதுக்க முடியும்? என்பதை முடிவு செய்தபின்பு எந்தப்பாடத்தை முதலில் படிக்க வேண்டும்? என்பதைத் தீர்மானிக்க வேண்டும். சிலர், இயற்பியல் பாடத்தை படிப்பதற்கு அதிக முன்னுரிமை கொடுப்பார்கள்.

நமக்கு விருப்பமான பாடத்தைத் தேர்ந்தெடுத்துப் படிப்பதைவிட சில கடினமான பாடத் தலைப்புகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து தேர்வுத் தயாரிப்பில் ஈடுபடுவது நல்லது.

தெளிவான நேரத்திட்டம் (Time Table) ஒன்றை உருவாக்கிக்கொள்வது நீட் தேர்வு வெற்றிக்கு அடிப்படையான ஒன்றாகும். இதன்மூலம், பாடத்தில் கவனம் செலுத்திப் படிக்கலாம். ஒரு பாடத் தலைப்பிற்கு (Topic) எவ்வளவு நேரம் ஒதுக்கி படிக்க வேண்டும் என்பதையும் திட்டமிடலாம்.

குறுகிய கால குறிக்கோள்களை நிர்ணயித்துக்கொண்டால், பாடங்களை புரிந்துகொண்டு படிப்பது எளிதாகும். சின்னஞ்சிறு குறிக்கோள்களை நிர்ணயித்து பாடங்களை படிக்க ஆரம்பிப்பதன்மூலம், குறிப்பிட்ட நேரத்திற்குள் பாடங்களை படித்து முடிக்க இயலும்.

“ஒருநாளில் 8 மணிநேரம் கண்டிப்பாக தேர்வுக்கான பாடங்களை படித்து முடிக்க வேண்டும்” என திட்டமிட்டு, அந்தப் பாடங்களை குறிப்பிட்ட நேரத்திற்கு படிக்க முடியாவிட்டால் பதற்றம் அடைய வேண்டாம். அடுத்தநாளில் “விடுபட்ட பாடங்களை படித்துக்கொள்ளலாம்” என்று எண்ணி தீர்மானித்து அடுத்தநாளில் அந்தப்பாடங்களை படித்து முடிக்க முயற்சி செய்யலாம். ஆனால், அதேவேளையில் அடிக்கடி படிக்கும் நேரத்தை தள்ளிப்போடும் மனநிலையை (Procrastination) வளர்த்துக்கொண்டால் குறிப்பிட்ட நேரத்திற்குள் பாடத்தை படிக்க இயலாது. எனவே, திட்டமிட்டபடி குறிப்பிட்ட நேரத்திற்குள் பாடத்தை படித்து முடிப்பது நல்லது.

தொடர்ந்து 2 அல்லது 3 மணிநேரம் படிக்கும்போது 5 அல்லது 10 நிமிடங்கள் குறுகிய இடைவெளிவிட்டு (Short Breaks) படிப்பது நல்லது.

5. நாள்தோறும் படித்தவற்றை நினைவில்கொள்ளுங்கள்

பாடத்தைத் தொடர்ந்து படித்துவிட்டு அதனை நினைவில் வைத்துக்கொள்ளும் வகையில் அடிக்கடி படித்தப் பாடத்தை திரும்பத்திரும்ப படிப்பது நல்லது. படித்தப் பாடத்தை திரும்பத்திரும்ப படிப்பதால் பாடத்தை நீண்டகாலம் நினைவில் நிறுத்திக்கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் தேர்வு நேரங்களில் நினைவில் நிற்கும் பாடக் கருத்துக்களை எளிதில் நினைவுக்குக் கொண்டுவந்து தேர்வு எழுத இயலும். இந்தத் திரும்பத்திரும்ப படிக்கும் பழக்கம், ஃபார்முலாக்கள், வரைபடங்கள், முக்கிய வறையரைகள் ஆகியவற்றை நினைவில் வைத்துக்கொள்ள உதவியாக அமைகிறது.

6. தொடர் பயிற்சிகள் அவசியம்

நீட் தேர்வில் வெற்றி பெற விரும்புபவர்கள் படித்தப் பாடத்தில் இடம்பெறும் முக்கிய கேள்விகளுக்கான விடைகளை மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். இதற்கு தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். படித்தப்பாடத்தை மனதில் நிறுத்திக்கொண்டால் தேர்வு நேரத்தில் எளிதான முறையில் சரியான விடையை எழுத இயலும்.

7.மாதிரி தேர்வுகள் எழுதுங்கள்

குறிப்பிட்ட நேரத்திற்குள் நீட் தேர்வில் கேட்கப்படும் சரியாக விடையளிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள மாதிரித் தேர்வுகள் எழுதுவது நல்லது. இதன்மூலம்,

எந்தெந்த பாடத்திற்கு சரியான விடைகள் எழுத இயலாமல் தவறு ஏற்படுகிறது? என்பதை அறிந்துகொள்ளலாம். தேர்வில் தவறான விடைகள் எழுதும்போது ‘தேர்வு பயம்’ (Exam Fear) ஏற்படும். இதனைத் தவிர்க்க தொடர்ந்து மாதிரித் தேர்வுகள் எழுதி தவறுகளைத் திருத்திக்கொள்ள வேண்டும்.

8.முந்தைய ஆண்டு கேள்வித்தாள்களை பயன்படுத்திக்கொள்ளுங்கள்

முந்தைய ஆண்டுகளில் நடைபெற்ற நீட் தேர்வின் கேள்வித்தாள்களை சேகரித்து அந்தக் கேள்விகளுக்கு முறையான பதில் எழுத பழகிக்கொள்ளுங்கள். இதன்மூலம், கேள்விகளுக்கு சரியாக விடையளிக்கவும், குறிப்பிட்ட நேரத்திற்குள் கேள்விகளுக்கு பதிலளிக்கவும், தேவையான பயிற்சியைப் பெற்றுக்கொள்ளலாம். இந்தப்பயிற்சிகள் அதிக மதிப்பெண்கள் பெற நிச்சயம் உதவும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com