

உடற்பயிற்சி செய்யும்போது அதிகமாக வியர்த்தால், 'இன்று நன்றாக உடற்பயிற்சி செய்திருக்கிறோம். நிறைய கொழுப்பு குறைந்திருக்கும்' என்று பலரும் நினைப்பார்கள். ஆனால் அதிகம் வியர்ப்பதற்கும். அதிக கொழுப்பு எரிக்கப்படுவதற்கும் நேரடித் தொடர்பு இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.
உடற்பயிற்சியின்போது உடலின் வெப்பம் அதிகரிக்கும். அந்த வெப்பத்தைக் குறைத்து உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்வதற்காகத்தான் வியர்வை வெளியேறுகிறது. ஒருவர் எவ்வளவு வியர்க்கிறார் என்பது உடல் தன்மை, வெப்பநிலை, ஈரப்பதம், உடற்பயிற்சி செய்யும் இடம் போன்றவற்றை பொறுத்து மாறுபடும்.
உதாரணமாக, வெப்பமான சூழலில் சாதாரண உடற்பயிற்சி செய்தால்கூட அதிகமாக வியர்க்கலாம். அதேநேரம் குளிரூட்டப்பட்ட அறையில் கடும் உடற்பயிற்சி செய்தாலும் வியர்வை குறைவாக இருக்கலாம். எனவே வியர்வையின் அளவை வைத்து உடற்பயிற்சியின் பலனை முடிவு செய்ய முடியாது. அப்படியானால் உடற்பயிற்சியை போதுமான அளவுக்கு செய்திருக்கிறோமா என்பதை எப்படி தெரிந்துகொள்வது? எளிமையான வழி 'பேச்சு பரிசோதனை'தான். மிதமான உடற்பயிற்சியின்போது பேச முடியும். ஆனால் மூச்சு விடுவது சற்று வேகமாக இருக்கும்.
கடுமையான உடற்பயிற்சியின்போது சில வார்த்தைகளுக்கு மேல் தொடர்ந்து பேசுவதற்கு சிரமமாக இருக்கும். பேச்சு பரிசோதனை செய்து இதயத்துடிப்பை கவனிக்கவும். உடற்பயிற்சியின் தீவிரத்தை அறியவும் இது உதவும். அதேநேரம் அதிகமாக வியர்க்கும்போது உடலில் நீர்ச்சத்து குறையக்கூடும். தலைச்சுற்றல், அதிக சோர்வு போன்றவை ஏற்பட்டால் உடற்பயிற்சியை நிறுத்தி சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு, தேவையான அளவு தண்ணீர் குடிக்கவேண்டும். உடற்பயிற்சி செய்து முடித்ததும் சட்டை முழுவதும் வியர்வையில் நனைந்திருக்க வேண்டிய அவசியமில்லை.
'எவ்வளவு வியர்த்திருக்கிறது?' என்பதைவிட, நமது உடலுக்கு ஏற்ற அளவில் தொடர்ந்து உடற்பயிற்சி செய்கிறோமா என்பதுதான் முக்கியம். வியர்வையால் உடல் எடை தற்காலிகமாக குறைந்தது போல் தோன்றினாலும், அது உடலில் உள்ள நீர்ச்சத்து குறைவதால்தான். போதிய அளவு தண்ணீர் குடித்து ஓய்வு எடுத்தால் உடல் எடை பழைய நிலைக்கு வந்துவிடும்