புகையிலை பழக்கம்: 70 லட்சம் பேர் ஆண்டுதோறும் மரணம்; அதிர்ச்சி தகவல்

புகைப்பிடிப்பவர்களின் அருகில் இருந்ததால் அந்த புகையினால் பாதிக்கப்பட்டு 16 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
புகையிலை பழக்கம்:  70 லட்சம் பேர் ஆண்டுதோறும் மரணம்; அதிர்ச்சி தகவல்
Published on

சென்னை

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில், இந்திய சுவாச ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் நரசிம்மன், நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, ஆண்டுதோறும் உலகில் 70 லட்சத்திற்கும் மேற்பட்டோர் புகையிலை தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர்.

இதில் கொடுமை என்னவென்றால், புகைப்பிடிப்பவர்களின் அருகில் இருந்ததால் அந்த புகையினால் பாதிக்கப்பட்டு 16 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக புகைப்பிடிப்பவர்களில் பெரும்பாலானோர், தங்களுடைய தந்தை புகைப்பிடிப்பதை பார்த்து தான் இந்த பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள்.

நீண்ட காலமாக புகைப்பிடிப்பவர்களில் 50 சதவீதம் பேர் புகையிலை தொடர்பான நோய்களால் தான் உயிரிழக்கின்றனர். புகைப்பிடித்தல் என்பது நுரையீரல் புற்றுநோய், இதய நோய், பக்கவாதம், காச நோய் மற்றும் பல்வேறு சுவாச நோய்களுக்கு நேரடி காரணமாக உள்ளது. தமிழக அரசு புகை பழக்கத்தில் இருந்து இளைஞர்களை பாதுகாக்க புகையிலை தொடர்பான ஆன்லைன் விளம்பரங்களுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும்.

பள்ளி-கல்லூரிகளுக்கு அருகில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். இளைஞர்களை ஆரம்ப கட்டத்திலேயே புகைப்பழக்கத்தில் இருந்து தடுத்து விட்டால், அவர்களுடைய எதிர்காலம் புகையில்லா எதிர்காலமாக, ஆரோக்கியமானதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com