ஆரோக்கியம் தரும் பாரம்பரிய அரிசி வகைகள்

மாப்பிள்ளை சம்பா அரிசியை சமைத்து சாப்பிடுவதால் நரம்பு மண்டலம், உடல் வலுப்பெறும்.
ஆரோக்கியம் தரும் பாரம்பரிய அரிசி வகைகள்
Published on

உணவே மருந்து என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். எந்த நோய்க்கும் உணவு மூலமாக தீர்வு காணலாம். அதற்குரிய உணவு வகைகளையும் அவர்கள் கண்டறிந்து வைத்திருந்தனர். ஏராளமான தானிய வகைகளை தமிழர்கள் அன்றாட வாழ்வில் உணவாக பயன்படுத்தி வந்தனர்.

கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, பூங்கார், காட்டுயானம், கருத்தார், காலாநமக், மூங்கில், இலுப்பைப்பூ சம்பா, கருங்குறுவை, தங்கச்சம்பா, குழியடிச்சான், கார் அரிசி, குடை வாழை, நீலம் சம்பா, வாடன் சம்பா, சீரக சம்பா, தூய மல்லி, கருடன் சம்பா, சேலம் சன்னா, பிசினி, சூரக்குறுவை, வாலான் சம்பா, கிச்சிலி சம்பா, தினை, குதிரைவாலி ஆகிய 25 வகையான அரிசிகளையும், அதன் பயன்பாடுகளையும் பார்ப்போம்.

மன்னர்கள் சாப்பிட்ட அரிசி வகை கருப்பு கவுனி. இது அதிக சத்து மிக்க வகையாகும். இது புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோயை தடுக்கும் தன்மையை கொண்டுள்ளதால் வசதி படைத்தவர்கள் அதிகமாக கருப்பு கவுனியை பயன்படுத்தி வந்தனர்.

மாப்பிள்ளை சம்பா அரிசியை பெரும்பாலானவர்கள் கேள்விப்பட்டிருப்பார்கள். ஆனால் ஒரு சிலரே பயன்படுத்தி இருப்பார்கள். இந்த அரிசியில் உணவு சமைத்து சாப்பிடுவதால் நரம்பு மண்டலம், உடல் வலுப்பெறுகிறது. மேலும் ஆண்மை சக்தியும் அதிகமாகும் என்று நம்பப்படுகிறது.

பூங்கார் அரிசியில் உணவு சாப்பிட்டால் சுகப்பிரசவம் ஏற்படுவதுடன் குழந்தைக்கு தேவையான தாய்ப்பால் சுரப்பதற்கும் வழி வகுக்கும்.

காட்டுயானம் அரிசி மலச்சிக்கல், புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோயை தடுக்க வல்லது.

கருத்தார் அரிசி மலச்சிக்கல், மூல நோயை தடுக்கும் தன்மை உடையது.

காலாநமக் அரிசி நரம்பு மண்டலம், மூளை, ரத்தம், சிறுநீரகம் ஆகியவை சீராக செயல்பட உதவுகிறது.

மூங்கில் அரிசி மூட்டு வலி, முழங்கால் வலிக்கு சிறந்தது.

இலுப்பைப்பூ சம்பா அரிசி பக்கவாதம் மற்றும் கால் வலியை சரியாக்கும் தன்மை உடையது.

கருங்குறுவை அரிசி இழந்த சக்தியை மீட்டு கொடிய நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

தங்கச்சம்பா அரிசி பல் மற்றும் இதயத்துக்கு உகந்தது.

குழியடிச்சான் அரிசியை சமைத்து தாய்மார்களுக்கு கொடுத்தால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.

கார் அரிசியை சமைத்து சாப்பிடுவதால் தோல் நோய் குணமடையும்.

குடை வாழை அரிசி குடல் சுத்தத்தை ஏற்படுத்தும்.

நீலம் சம்பா அரிசி ரத்த சோகையை நீக்கும் தன்மையை கொண்டது.

வாடன் சம்பா அரிசியை சாப்பிட்டால் மன நிம்மதி ஏற்படுவதுடன் அமைதியான தூக்கமும் கிடைக்கும்.

சீரக சம்பா அரிசி முகத்திற்கு அழகு சேர்ப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.

தூய மல்லி அரிசி உடல் உள் உறுப்புகளை வலுப்படுத்துகிறது.

கருடன் சம்பா அரிசி ரத்தம், உடலை சுத்தம் செய்கிறது.

சேலம் சன்னா அரிசி தசை நரம்பு, எலும்புகளை வலுப்படுத்தும்.

பிசினி அரிசி மாதவிடாய் பிரச்சினைக்கு தீர்வு காண்பதுடன், பெண்களின் இடுப்பு வலியை சரி செய்கிறது.

சூரக்குறுவை அரிசி உடல் எடையை குறைக்க செய்கிறது.

வாலான் சம்பா அரிசி சுகப்பிரசவத்துக்கு வழிவகுக்கும்.

கிச்சிலி சம்பா அரிசி இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து நிறைந்தது.

தினை அரிசி உடல் எடையை குறைப்பதுடன் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

குதிரைவாலி இதயத்துக்கு நல்லது.

தற்போது வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, வாழ்க்கை சூழலும் மாறி வருகிறது. உணவு சாப்பிடுவதற்கு சரியான நேரத்தை செலவிட பலரும் தவிர்த்து விடுகிறார்கள். நேரத்திற்கு உணவு சாப்பிடும் பழக்கம் குறைந்து வருகிறது. அவசர அவசரமாக உணவை சாப்பிடுகின்றனர். அதிலும் துரித உணவுகள் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் உணவு வகைகளை இளம் தலைமுறையினர் விரும்பி சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்தில் எதிர்மறை விளைவுகள் ஏற்படுகின்றன. வயதான காலத்தில் வரவேண்டிய நோய்களும் இளம் வயதிலேயே வருவதற்கு உணவு முறையே முக்கிய காரணம் என்று டாக்டர்கள் கூறி வருகின்றனர்.

இயற்கை உணவு, பாரம்பரிய தானிய வகைகள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மக்களும் படிப்படியாக பாரம்பரிய உணவு முறைக்கு மாறத் தொடங்கி உள்ளனர். பாரம்பரிய அரிசி வகைகளின் சாகுபடி தமிழகத்தில் பல மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com