கூட்ட நெரிசல்.. மூச்சுத்திணறல் ஏற்பட்டால் என்ன செய்யவேண்டும்?


கூட்ட நெரிசல்.. மூச்சுத்திணறல் ஏற்பட்டால் என்ன செய்யவேண்டும்?
x

இதயம், நுரையீரல் பாதிப்புக்கு சிகிச்சை பெறுபவர்கள் கூட்ட நெரிசல் நிலவும் இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது.

கூட்டம் அதிகமான இடங்களில் பலருக்கும் மூச்சுத் திணறல் ஏற்படுவது இயல்பானது. ஆனால் சிலருக்கு இது தீவிரமாகவும், உயிருக்கு ஆபத்தாகவும் மாறிவிடுகிறது. குழந்தைகள் மற்றும் பெண்கள், ஏதேனும் உடல்நல பிரச்சினைகள் இருப்பவர்கள் குறிப்பாக இதயம், நுரையீரல் பாதிப்புக்கு சிகிச்சை பெறுபவர்கள் கூட்ட நெரிசல் நிலவும் இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது.

மூச்சுத் திணறல் ஏற்பட முக்கிய காரணங்கள்:

கூட்டம் அதிகமுள்ள இடங்களில் காற்றோட்டம் குறைவதால் சுத்தமான காற்று உடலுக்கு போதிய அளவில் செல்லாது. அதனால் சுவாச கோளாறு ஏற்படக்கூடும்.

மக்கள் அதிகம் பேர் கூடி அந்த பகுதியில் கூட்ட நெரிசல் மிகும்போது உடல் வெப்பம் உயரும். இதனால் சுவாசிக்க சிரமமாகிவிடும்.

பதற்றம், பயம், கூட்டத்தில் சிக்கிக்கொண்ட உணர்வு போன்றவை மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இது சுவாசத்தை வேகமாக்கி மூச்சுத்திணறலை உருவாக்கும். குறிப்பாக ஆஸ்துமா, நுரையீரல் நோய், இதய நோய், அலர்ஜி போன்ற பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு சுவாசிப்பதில் சட்டென்று சிரமம் ஏற்படும்.

மூச்சுத் திணறல் ஏற்பட்டால் உடனடியாக செய்ய வேண்டியவை:

கூட்டத்திலிருந்து உடனே வெளியேறவேண்டும். சுத்தமான காற்று கிடைக்கும் திறந்த வெளி இடத்திற்கு செல்லவேண்டும்.

மெதுவாக சுவாசிக்கவேண்டும். மூக்கின் வழியாக காற்றை இழுத்து, வாயின் வழியாக மெதுவாக வெளியேற்றவேண்டும்.

தண்ணீர் குடிக்கலாம். இதனால் உடல் வெப்பம் குறையும், சுவாசப் பாதை ஈரப்பதம் பெற உதவும்.

மூச்சு திணறல் ஏற்பட்டால் அமைதியாக இருக்க முயற்சிக்கவேண்டும். பதற்றத்தை குறைக்கும் விதமாக நிதானமாக செயல்படவேண்டும்.

மருந்து வைத்திருக்கும் ஆஸ்துமா நோயாளிகள் உடனே இன்ஹேலர் பயன்படுத்த வேண்டும்.

மூச்சு விடுவதில் மிகுந்த சிரமம், நெஞ்சு வலி, மயக்கம், அதிக வியர்வை வெளியேறுதல் போன்றவை இருந்தால் உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று மருத்துவரிடம் உரிய ஆலோசனை பெற வேண்டும்.

1 More update

Next Story