

சியோல்,
தற்போதைய பரபரப்பான வாழ்க்கை முறையில், பலர் இரவு நேர தூக்கத்தை தொலைத்து தவிக்கின்றனர். பணிச்சுமை ஒரு காரணமாக சொல்லப்பட்டாலும், அன்றாட நடைமுறைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். பலர் டாக்டர்களின் அனுமதியுடன் தூக்கத்திற்கு மாத்திரை எடுத்துக்கொள்கிறார்கள்.
தூக்க மாத்திரை எடுத்துக்கொள்ளாமலேயே, நன்கு தூக்கம் வர தற்போது புதிய வழிமுறை ஒன்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
அதாவது, இரவில் தூங்கச் செல்லும்போது கால்களில் சாக்ஸ் அணிந்து கொண்டால், மிக விரைவாகத் தூக்கம் வர உதவுவதுடன், ஒட்டுமொத்த தூக்கத்தின் தரத்தையும் மேம்படுத்தும் என்று மருத்துவ ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. நம்முடைய கால்கள் கதகதப்பாக இருக்கும்போது, ரத்த நாளங்கள் விரிவடைந்து, உடலின் உட்புற வெப்பநிலை குறையத் தொடங்குகிறது; இது தூங்குவதற்கான நேரம் வந்துவிட்டது என்ற சமிக்ஞையை நம் மூளைக்கு துல்லியமாக அனுப்புகிறது.
சியோல் தேசிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஒரு முக்கிய ஆய்வில், இரவில் சாக்ஸ் அணிந்து தூங்கியவர்கள் வழக்கத்தைவிட மிக விரைவாகத் தூங்கியதும், நீண்ட நேரம் நிம்மதியாகக் கண்விழிக்காமல் உறங்கியதும் கண்டறியப்பட்டுள்ளது.
கால்களைக் கதகதப்பாக வைத்திருப்பது உடலில் வெப்பத்தைச் சீராகப் பரவச் செய்து, இயற்கையாகவே தூக்கம் வரும் செயல்முறையைத் தூண்டுகிறது; எனவே, இரவு நேரத்தில் கால்கள் குளிர்ந்து போவதால் தூக்கமில்லாமல் தவிப்பவர்களுக்கு இந்த எளிய பழக்கம் ஒரு சிறந்த வரப்பிரசாதமாகும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.