10, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகம் வினியோகம்

10, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகம் வினியோகம் செய்யப்பட்டது.
Published on

புதுக்கோட்டை,

கோடை விடுமுறை முடிந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படும். கொரோனா தொற்று பரவலை தடுக்கும்பொருட்டு தற்போது பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால், மாணவ-மாணவிகள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். ஆனால், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் கடந்த மாதமே அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டு விட்டன.

அந்த புத்தகங்களை மாணவ-மாணவிகளுக்கு வினியோகம் செய்யும் பணி நேற்று தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 126 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு பாடப் புத்தகங்கள் வினியோகம் செய்யும் பணி அந்தந்த பள்ளிகளில் தொடங்கியது.

புதுக்கோட்டையில் ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்(பொறுப்பு) திருச்செல்வம் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்கினார். இதனை மாணவிகள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து மகிழ்ச்சியுடன் பெற்றுச் சென்றனர். முன்னதாக, காமராஜர் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. காமராஜர் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இதேபோல அன்னவாசல், இலுப்பூர், மலைக்குடிப்பட்டி, பரம்பூர், முக்கண்ணாமலைப்பட்டி, வயலோகம் மற்றும் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களை வினியோகம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com