அரியலூர் மாவட்ட உள்ளாட்சி தேர்தல் பணியில் 8,313 அலுவலர்கள் கலெக்டர் ரத்னா தகவல்

அரியலூர் மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் 8,313 அலுவலர்கள் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடவுள்ளனர் என்று மாவட்ட கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.
Published on

அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், உள்ளாட்சி தேர்தல் 2019 சம்பந்தமான செய்தியாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ரத்னா தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல் டிசம்பர் மாதம் 27 மற்றும் 30-ந் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதன் வேட்பு மனு தாக்கல் வருகிற 6-ந் தேதி முதல் தொடங்கும். தேர்தல் நாளன்று வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணியுடன் முடிவடையும். வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் ஜனவரி 2-ந் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் 13-ந் தேதியாகும். வருகிற 16-ந் தேதி வேட்பு மனுக்களை ஆய்வு செய்தலும், 18-ந் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெறுதலும் நடக்க உள்ளது. வருகிற ஜனவரி மாதம் 6-ந் தேதி தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம ஊராட்சி தலைவர்களின் முதல் கூட்டம் மற்றும் பதவி ஏற்பு ஆகியவை நடைபெற உள்ளது.

8,313 அலுவலர்கள்

அரியலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 12 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியிடங்களும், 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 113 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களும், 201 கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடங்களும் மற்றும் 1,662 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களும் காலியாக உள்ளன. அரியலூர் மாவட்டத்தில் 1,017 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள ஊரக பகுதிகளில் 2 லட்சத்து 68 ஆயிரத்து 379 ஆண் வாக்காளர்களும், 2 லட்சத்து 68 ஆயிரத்து 590 பெண் வாக்காளர்களும் மற்றும் 7 இதர வாக்காளர்களும் என மொத்தம் 5 லட்சத்து 36 ஆயிரத்து 976 வாக்காளர்கள் உள்ளனர்.

ஊராட்சி தேர்தலுக்காக 14 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 269 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். ஊராட்சி தேர்தலுக்காக ஒரு வாக்குச்சாவடிக்கு 7 அல்லது 8 அலுவலர்கள் வீதம் 8,313 அலுவலர்கள் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மக்கள் சுதந்திரமாகவும், அச்சமின்றியும் வாக்களிக்க ஏதுவாகவும், வாக்குச்சாவடி களுக்கு வாக்குப்பதிவு பொருட்களை பாதுகாப்பாக எடுத்துச் செல்லவும், அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுவதை உறுதி செய்திடவும் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது.

ஒத்துழைக்க வேண்டும்

சாதாரண நேரடித்தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளைக் கொண்டு 1 மாவட்ட ஊராட்சித்தலைவர் பதவியிடமும், 1 மாவட்ட ஊராட்சித்துணை தலைவர் பதவியிடமும், 6 ஊராட்சி ஒன்றியத்தலைவர் பதவியிடங்களும், 6 ஊராட்சி ஒன்றியத்துணை தலைவர் பதவியிடங்களும், 201 கிராம ஊராட்சி துணைத்தலைவர் பதவியிடங்களும் மறைமுகத்தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும். தேர்தல் நடத்தை விதிகள் மாவட்ட முழுவதும் உள்ள 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட அனைத்து ஊரக உள்ளாட்சி பகுதிகளிலும் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் தேர்தல் நடத்தை விதிகளை கடைபிடித்து, தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெற எல்லா விதத்திலும் மாவட்ட தேர்தல் நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தர்ராஜன், அரியலூர் கோட்டாட்சியர் (பொறுப்பு) பாலாஜி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் ரகு, ரவிச்சந்திரன் மற்றும் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com