முல்லைப்பெரியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும்

உத்தமபாளையம் அருகே முல்லைப்பெரியாற்றின் குறுக்கே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட அணையை அகற்றி விட்டு, புதிதாக தடுப்பணை கட்ட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
Published on

உத்தமபாளையம்,

உத்தமபாளையம் அருகே உள்ள அணைப்பட்டி முல்லைப்பெரியாற்றின் குறுக்கே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அணை கட்டப்பட்டது. இந்த அணையில் இருந்து விடப்படுகிற தண்ணீர் ஆற்றுக்கு சென்றது. இதனால் அணைப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. குடிநீர், பாசனத்துக்கு தட்டுப்பாடின்றி தண்ணீர் கிடைத்தது.இந்தநிலையில் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு கனமழை பெய்தது.

அப்போது ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் அந்த அணையின் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. அதன்பிறகு அந்த அணையை சீரமைக்கவில்லை. இதனால் அணை இருந்த பகுதியை தனியார் சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர்.

தற்போது அணை இருந்த இடம், தென்னந்தோப்பாக காட்சி அளிக்கிறது. ஆக்கிரமிப்பு காரணமாக அணைப்பட்டி பகுதியில் முல்லைப்பெரியாறு செல்லும் வழித்தடமும் குறுகிபோய் விட்டது. எனவே ஆக்கிரமிப்பை அகற்றி அணையை சீரமைக்க வேண்டும் அல்லது அதனை அகற்றிவிட்டு புதிதாக அங்கு தடுப்பணை கட்ட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட அணை இருந்த இடத்தில் மீண்டும் தடுப்பணையை கட்டி அங்கிருந்து சண்முகாநதி அணை வாய்க்கால்க்கு சுரங்கபாதை அமைத்து தண்ணீர் கொண்டு செல்லலாம். ஏற்கனவே சுருளிப்பட்டி தொட்டமாந்துறை ஆற்றுப்பகுதியில் இருந்து தனியாக கால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் நிதி ஒதுக்கீடு செய்யாததால் பணிகள் நடைபெறவில்லை.

அணைப்பட்டியில் அணை கட்டினால் அங்கிருந்து சண்முகாநதி கால்வாய்க்கு தண்ணீர் கொண்டு செல்வது மிகவும் எளிது. இதனால் சின்னமனூர் ஒன்றிய பகுதியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெறும். மேலும் ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதால் இந்த பகுதியில் முன்பு இருந்ததை போல் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இதனால் விவசாயம் செழிக்கும். இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com