முல்லைப்பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு மதகுகளை இயக்கி சோதனை

முல்லைப்பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது மதகுகளை இயக்கி சோதனை செய்தனர்.
முல்லைப்பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு மதகுகளை இயக்கி சோதனை
Published on

குமுளி,

தமிழககேரள மாநில எல்லையில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்ட உயர்வை கண்காணித்தல் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்பார்வை செய்தல் போன்ற பணிகளுக்காக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி 3 பேர் கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவுக்கு உதவியாக 5 பேர் கொண்ட துணை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது.

துணை கண்காணிப்பு குழுவினர் அணையில் அவ்வப்போது ஆய்வு செய்து, அணை நிலவரம் குறித்து மூவர் கண்காணிப்பு குழுவுக்கு அறிக்கை அளித்து வருகின்றனர். கடைசியாக துணை கண்காணிப்பு குழுவினர், கடந்த பிப்ரவரி மாதம் 26ந்தேதி அணையில் ஆய்வு செய்தனர். இந்தநிலையில் மூவர் கண்காணிப்பு குழுவின் வழிகாட்டுதல்படி, முல்லைப்பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.

இதற்காக துணை கண்காணிப்பு குழுவின் தலைவரான மத்திய நீர்பாசனத்துறை செயற்பொறியாளர் சரவணக்குமார் தலைமையில், தமிழக பிரதிநிதிகளான அணையின் செயற்பொறியாளர் சுப்பிரமணியன், உதவி கோட்ட பொறியாளர் சாம்இர்வின், கேரள மாநில பிரதிநிதிகளான கேரள நீர்ப்பாசனத்துறை செயற்பொறியாளர் கிரிஜாபாய், உதவி பொறியாளர் பிரசீத் ஆகியோர் தேக்கடியில் இருந்து படகு மூலம் அணைக்கு சென்றனர்.

அணையில் மதகு பகுதி, பேபி அணை, சுரங்கப்பகுதி ஆகிய இடங்களை பார்வையிட்டனர். சுரங்கப் பகுதியில் நீர்க்கசிவு அளவை ஆய்வு செய்தனர். சுமார் 1 மணி நேரம் அணையில் ஆய்வு செய்துவிட்டு தேக்கடிக்கு திரும்பி வந்தனர். பின்னர், குமுளி 1ம் மைல் பகுதியில் உள்ள மூவர் கண்காணிப்பு குழு அலுவலகத்தில், துணை கண்காணிப்பு குழுவின் ஆய்வுக்கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் வல்லக்கடவு வழியாக பாதை இன்னும் சீரமைக்கப்படாமல் உள்ளது குறித்தும், அதற்கான அனுமதி பெறுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தை தொடர்ந்து துணை கண்காணிப்பு குழுவினர் கூறுகையில், அணையின் வழக்கமான ஆய்வே மேற்கொள்ளப்பட்டது. அணையில் உள்ள 2, 8வது மதகுகள் இயக்கி சோதித்துப் பார்க்கப்பட்டன. மூவர் கண்காணிப்பு குழுவினர் இந்த மாதம் (மே) 2வது வாரம் அணையில் ஆய்வு செய்ய உள்ளனர்.

வல்லக்கடவு வழியாக அணைக்கு வாகனங்களில் செல்வதற்கான பாதை கடந்த ஆகஸ்டு மாதம் பெய்த பலத்த மழையால் பாதிக்கப்பட்டது. அங்குள்ள ஒரு பாலமும் சேதம் அடைந்தது. இதை சீரமைக்க தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு துணை கண்காணிப்பு குழுவின் மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த ஆணையத்தின் மூலம் தேக்கடி பெரியாறு புலிகள் காப்பகத்துக்கு அனுமதியும், அதற்கான நிதியும் வழங்கப்படும். விரைவில் இதற்கான அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தற்காலிகமாக வல்லக்கடவு பாதையில் உள்ள பாலம் சீரமைக்கப்பட்டுள்ளதாக புலிகள் காப்பக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com