பா.ஜனதா மோடியின் கட்சி அல்ல - மத்திய மந்திரி நிதின்கட்காரி பேட்டி

பா.ஜனதா, மோடி அல்லது அமித்ஷாவின் கட்சி அல்ல என்று மத்திய மந்திரி நிதின்கட்காரி கூறினார்.
Published on

புதுடெல்லி,

மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின்கட்காரியிடம், மோடி என்றால் பா.ஜனதா, பா.ஜனதா என்றால் மோடி என்றாகிவிட்டதா? என்று கேள்வி எழுப்பியபோது அவர் கூறியதாவது:-

கடந்த காலத்தில் பா.ஜனதா கட்சி வாஜ்பாய் அல்லது அத்வானியின் கட்சியாக இருந்ததில்லை. அதேபோல இப்போது அமித்ஷா அல்லது நரேந்திர மோடியின் கட்சியாகவும் இல்லை. மோடியை மையமாக வைத்து பா.ஜ.க. உள்ளது என்று சொல்வது தவறு. ஆனால் பா.ஜ.க.வுக்கு கிடைத்த பரிசு பிரதமர் மோடி, பிரதமர் மோடிக்கு கிடைத்த பரிசு பா.ஜ.க.

பா.ஜ.க. எப்போதும் ஒரு தனிநபரை மையமாக வைத்து இயங்கியது இல்லை. இது கொள்கையை அடிப்படையாக கொண்ட கட்சி. இதில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை. கட்சியின் செயற்குழுவே அனைத்து முடிவுகளையும் எடுக்கும்.

கட்சி வலுவானதாக இருந்து அதன் தலைவர் பலவீனமானவராக இருந்தால் தேர்தலில் வெற்றிபெற முடியாது. அதே போலத்தான் தலைவர் பிரபலமானவராக இருந்தாலும் கட்சி பலவீனமாக இருந்தால் வெற்றிபெற முடியாது. இயற்கையிலேயே பிரபலமான தலைவர் கட்சியின் முன்னணிக்கு வருவார்.

தேர்தலில் பா.ஜனதாவின் வளர்ச்சி திட்டங் களை வீழ்த்தவே எதிர்க்கட்சிகள் சாதி மற்றும் மதரீதியாக விஷத்தை விதைக்க நினைக்கின்றன. ஆனால் மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். நாங்கள் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெறுவோம்.

பா.ஜ.க.வுக்கு தேசநலன் ஒரு பிரச்சினை அல்ல ஆனால் அது எங்கள் ஆன்மா. சிறந்த நிர்வாகம் மற்றும் வளர்ச்சி எங்கள் நோக்கம். ஏழைகளுக்கு உணவு, உடை, இருப்பிடம் வழங்குவதும், சமூகத்தில் சுரண்டப்படுவதையும், பின்னடைவையும் ஒழிப்பதும் எங்கள் கொள்கை. கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றிபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com