ஏற்கனவே 7 பேரை பலி வாங்கிய ஆலை: பட்டாசுகள் வெடித்து சிதறியதில் மரம் வெட்டும் தொழிலாளி சாவு 5 பேருக்கு தீவிர சிகிச்சை

ஏற்கனவே 7 பேரை பலி கொண்ட பட்டாசு ஆலையில் மீண்டும் ஏற்பட்ட வெடி விபத்தில் மரம் வெட்டும் தொழிலாளி பலியானார். 5 பேர் பலத்த தீக்காயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Published on

திருவேங்கடம்,

நெல்லை மாவட்டம் வரகனூரில் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையை சேர்ந்த அய்யாச்சாமி (வயது 48) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வந்தது. இங்கு 2 மாதங்களுக்கு முன்பு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பட்டாசு தயாரிக்கப்பட்ட பல அறைகள் இடிந்து தரைமட்டமானது. இந்த விபத்தை தொடர்ந்து அந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. தற்போது அந்த ஆலை இயங்கவில்லை. அங்கிருந்த ஒரு அறை மட்டும் தப்பிய நிலையில் அங்கு கழிவுபட்டாசுகள் குவித்து வைக்கப்பட்டு இருந்தது.

இதற்கிடையில் சில தினங்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் ஆலை அதிபரான அய்யாச்சாமி உயிரிழந்தார். இந்த நிலையில் பட்டாசு ஆலை இயங்கிய இடத்தில் நேற்று தொழிலாளர்கள் சிலர் சீமைக்கருவேல மரங்களை வெட்டும் பணியில் ஈடுபட்டனர்.

அந்த தொழிலாளர்களுக்காக மதிய உணவு தயார் செய்யும் பணி பட்டாசு கழிவுகள் குவித்து வைக்கப்பட்டு இருந்த அறையின் அருகே நடந்துள்ளது. அப்போது யாரும் எதிர்பாராத வகையில் தீப்பொறி பறந்து அந்த அறையில் விழுந்துள்ளது. கோடை வெப்பம் அதிகமாக இருந்த நிலையில் தீப்பொறி பட்டதும் பட்டாசு கழிவுகள் வெடித்து சிதறி தீப்பற்றி எரிந்தது. இதில் அந்த அறை முற்றிலுமாக இடிந்து தரை மட்டமானது.

மேலும் அங்கிருந்த தொழிலாளர்களான கோபால் (61), கனகராஜ் (48), அர்ச்சுனன் (18), குருசாமி (62), காமராஜ் (40), மற்றொரு குருசாமி(58) ஆகிய 6 பேர் உடல் கருகினர். இவர்கள் அனைவரும் நெல்லை மாவட்டம் மாங்குடி கிராமத்தை சேர்ந்தவர்கள்.

தகவல் அறிந்ததும் விருதுநகர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் முத்துப்பாண்டி மற்றும் வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் காந்தையா ஆகியோரது தலைமையில் வீரர்கள் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் நெல்லை மாவட்டம் திருவேங்கடத்தில் இருந்தும் 2 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது.

காயம் அடைந்தவர்கள் அனைவரும் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கு கோபால் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து திருவேங்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் திருவேங்கடம் தாசில்தார் பாஸ்கரன் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்தினார். ஏற்கனவே 7 பேர் பலியான ஆலையில் மீண்டும் விபத்து ஏற்பட்டு மரம் வெட்டும் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com