

வேலூர்,
இந்திய ரிசர்வ் வங்கியால் 10 ரூபாய் நாணயங்கள் அச்சடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டன. இந்த 10 ரூபாய் நாணயங்கள் இந்தியா முழுவதும் புழக்கத்தில் உள்ளன.
வேலூர் மாவட்டத்தில் சில மாதங்களுக்கு முன்பு 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்தி ஏற்பட்டது. இந்த திடீர் வதந்தியால் 10 ரூபாய் நாணயங்களை வேலூர் மாவட்டத்தில் சில இடங்களில் பொதுமக்களும், வியாபாரிகளும் வாங்க தயங்கினர். பின்னர் நாளடைவில் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்தி மாவட்டம் முழுவதும் பரவியது. இதனால் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாத நிலைக்கு சென்றது.
இதையடுத்து மாவட்ட நிர்வாகம் 10 ரூபாய் நாணயங்களை அனைவரும் பயன்படுத்தலாம். செல்லக்கூடியதுதான், இதனை வாங்க மறுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டது. எனினும் 10 ரூபாய் நாணயங்களை யாரும் வாங்க தயாராக இல்லை.
சிறு வியாபாரிகள் முதல் பெரும் நிறுவன வர்த்தகர்கள் வரை யாருமே 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். ஆனால் வியாபாரிகள் தெரிவிக்கையில், பொதுமக்கள் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கின்றனர் என்கின்றனர். இவ்வாறு ஒருவரை, ஒருவர் மாறி மாறி குற்றம் சுமத்தும் நிலையில், பெரிய வர்த்தகர்கள் அன்றாட வருமானத்தை வங்கியில் செலுத்த போனால் வங்கிகளிலும் வாங்க மறுப்பதாக கூறுகின்றனர். வங்கி அதிகாரிகளோ, தாங்கள் வாங்கி வைத்திருக்கும் 10 ரூபாய் நாணயங்கள் லட்சக்கணக்கான ரூபாய்க்கு தேங்கி உள்ளதாகவும், அதனை வேலூர் மாவட்ட மக்கள் வாங்க மறுப்பதாகவும் தெரிவிக்கின்றனர். வங்கிகளில் மட்டும் இல்லாமல் ஒவ்வொரு கடைகளிலும் 10 ரூபாய் நாணயங்கள் தேக்கத்தில் உள்ளன.
வேலூர் பொதுமக்கள் தென் மாவட்டங்களுக்கு செல்லும் போது அரசு விரைவு போக்குவரத்து பஸ்களில் 10 ரூபாய் நாணயங்களை வாங்குவதையும், மற்ற மாவட்ட கடைகள் மற்றும் பொதுமக்களிடம் அவை புழக்கத்தில் இருப்பதையும் பார்த்து வியப்படைகின்றனர். அதே சமயத்தில் தென் மாவட்டமான திருச்சியில் இருந்து வேலூர் புதிய பஸ்நிலையத்திற்கு பஸ்சில் வந்து இறங்கிய ஒரு பயணி தனது நண்பர் வீட்டுக்கு செல்ல வேலூர் நகர தனியார் பஸ்சில் ஏறி இருக்கிறார். அப்போது அவர் கண்டக்டரிடம் 10 ரூபாய் நாணயத்தை கொடுத்துள்ளார். அதை வாங்க மறுத்துள்ளார் கண்டக்டர். அதற்கு அந்த நபர் திருச்சியில் இருந்து வந்த அரசு விரைவு பேருந்தில் 10 ரூபாய் நாணயத்தை வாங்குகிறபோது நீங்கள் ஏன் வாங்கக் கூடாது என கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு கண்டக்டர் எல்லா இடங்களிலும் இந்த நாணயம் புழக்கத்தில் உண்டு. ஆனால் வேலூர் மாவட்டத்தில் மட்டும் செல்லாது என்றார்.
ஆரம்பத்தில் பெரிய ஓட்டல்களில் மட்டும் 10 ரூபாய் நாணயங்களை வாங்கினர். இதையடுத்து அந்த ஓட்டல் நிர்வாகத்தினர் அந்த நாணயங்களை வங்கிகளில் செலுத்த முடியவில்லை எனக் கூறி அவர்களும் வாங்குவதை நிறுத்திவிட்டனர். இதிலும் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், வேலூர் அருகே சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் பாலகத்தில் உள்ள வியாபாரிகள் மட்டும் வாங்குகின்றனர். அவர்களிடம், நீங்கள் மட்டும் எப்படி வாங்குகின்றீர்கள், உங்களிடம் இருந்து வங்கிகள் 10 ரூபாய் நாணயங்களை பெற்றுக்கொள்கிறார்களா? என்று கேட்டதற்கு, எங்களிடம் (ஆவின்) இருந்து வங்கிகள் வாங்குவதில்லை. ஆனால் எங்கள் வாடிக்கையாளர்களிடம் நாங்கள் கொடுக்கும் நாணயங்களை நாங்களே வாங்கிக்கொள்கிறோம். அதனால் வாடிக்கையாளர்களும் எங்களிடம் வாங்கிக்கொள்கின்றனர் எனக் கூறினர். இதனால் வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை 10 ரூபாய் நாணய புழக்கம் என்பது ஆவின் பால் வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் எனும் சிறுவட்டத்துக்குள்ளேயே சுற்றி வருகின்றன.
10 ரூபாய் நாணயம் செல்லாது என்ற வதந்தியால் வந்த இந்த சோதனை பூனைக்கு மணிகட்டுவது யார்? என்பது போல் உள்ளது. மாவட்ட நிர்வாகம் ஒரு திடமான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே வேலூர் மாவட்ட வர்த்தகத்தில் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு 10 ரூபாய் நாணயங்களை கொண்டு வர முடியும் என்பதில் சந்தேகமில்லை.