பெலகாவி அருகே கார்-மினி லாரி மோதல்: தொழிலாளிகள் உள்பட 4 பேர் சாவு

பெலகாவி அருகே கார்-மினி லாரி மோதலில் தொழிலாளிகள் உள்பட 4 பேர் பலியாயினர்.
பெலகாவி அருகே கார்-மினி லாரி மோதல்: தொழிலாளிகள் உள்பட 4 பேர் சாவு
Published on

பெங்களூரு,

பெலகாவி அருகே கார், மினி லாரி மோதிக் கொண்ட விபத்தில் தொழிலாளிகள் உள்பட 4 பேர் பலியானார்கள். மேலும் 3 பேர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பெலகாவி மாவட்டம் நிப்பானி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலையில் காய்கறிகளை ஏற்றிக் கொண்டு ஒரு மினி லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் ஒரு கார் சென்றது. இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக மினி லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. மினி லாரி மோதிய வேகத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியது. இந்த கோர விபத்தில் காரில் இருந்த 3 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள்.

அத்துடன் மினி லாரியின் முன்பகுதியும் முற்றிலும் சேதம் அடைந்தது. இதனால் மினி லாரி டிரைவரும் தலையில் பலத்தகாயம் அடைந்து உயிர் இழந்தார். இதுபற்றி அறிந்ததும் நிப்பானி போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிய 3 பேரையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீஸ் விசாரணையில், விபத்தில் பலியானவர்களின் பெயர்கள் சபீர் சையத் பாக்வான்(வயது30), நதீம்(27), ரியாஸ் பாக்வான்(37), ரமேஷ்(40) என்று தெரிந்தது. இவர்களில் ரமேஷ் தான் மினி லாரி டிரைவர் ஆவார். அவரது சொந்த ஊர் ஹாவேரி மாவட்டம் ஹிரேகெரூர் ஆகும். மற்ற 3 பேரும் மராட்டிய மாநிலம் கோலாப்பூரை சேர்ந்த தொழிலாளிகள் என்பதும், அவர்கள் வேலைக்காக பெலகாவி மாவட்டத்திற்கு வந்தபோது விபத்தில் சிக்கியதும் தெரியவந்தது.

மினி லாரியை டிரைவர் வேகமாக ஓட்டியதே விபத்திற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. இதுகுறித்து நிப்பானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com