

ஈரோடு,
ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையங்கள் ஈரோட்டை அடுத்து உள்ள சித்தோடு சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டு உள்ளது.
ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, குமாரபாளையம், காங்கேயம், தாராபுரம் என 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவாகும் வாக்குகளை தனித்தனி மையங்களில் எண்ண ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. இதற்காக ஒரே வளாகத்தில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. முன்னதாக ஈரோடு மாவட்ட கலெக்டரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான சி.கதிரவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்திகணேசன், மாவட்ட வருவாய் அதிகாரி ச.கவிதா உள்பட அதிகாரிகள் வாக்குப்பதிவு மையங்கள் அமையும் கட்டிடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதைத்தொடர்ந்து ஏற்பாடுகள் தொடங்கின.
முதல் கட்டமாக வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைக்கும் அறை தயார் செய்யப்பட்டு உள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் உரிய வாக்குச்சாவடி வரிசை எண்கள் போடப்பட்டு அதற்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வரிசைப்படி வைக்க எண் வரிசைப்படி கோடுகள் போடப்பட்டு உள்ளன. இதுபோல் இந்த அறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.
மேலும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் உட்காரும் பகுதி மற்றும் வாக்கு எண்ணும் பகுதியின் இடையே பாதுகாப்பு வேலிகள் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தேர்தலுக்கு முன்பு 6 வாக்குப்பதிவு மற்றும் மின்னணு வாக்குப்பதிவு காப்பு அறைகள் அனைத்திலும் தேவையான வசதிகள் செய்யப்பட்டு போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட உள்ளது.