அரசு அதிகாரிகள் சட்டத்தின்படி செயல்பட வேண்டும் கவர்னர் கிரண்பெடி அறிவுரை

அரசு அதிகாரிகள் சட்டத்தின்படி செயல்பட வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தி உள்ளார்.
அரசு அதிகாரிகள் சட்டத்தின்படி செயல்பட வேண்டும் கவர்னர் கிரண்பெடி அறிவுரை
Published on

புதுச்சேரி,

புதுவையில் மருத்துவ படிப்புக்கான இடங்களை நிரப்புவதில் நடந்து வந்த முறைகேடுகள் தற்போது சி.பி.ஐ.யின் விசாரணைக்குள் வந்து உள்ளது. இந்த விஷயத்தில் நிர்வாகத்தின் கவனக்குறைவானது மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் விசாரணையின் கீழ் உள்ளது.

இந்த முறைகேடுகள் மாணவர் சேர்க்கையில் தொடர்புடைய மூத்த அதிகாரிகளுக்கு தெரியாமல், அவர்கள் தொடர்பின்றி நடந்திருக்க வாய்ப்பே இல்லை. அனைத்து அதிகாரிகளும் சட்டத்தின் வழியில் நின்று மக்களுக்கு சேவை செய்யவேண்டும். சிலருக்கு ஆதாயம் அளிப்பதற்காக சட்டத்தை மீறி செயல்படும்போதுதான் விதிமீறல்கள் ஏற்படுகின்றன.

சட்டத்தின்படிதான்...

முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடைபெறும் சூழலில் கோப்புகளில் பதிவு செய்யப்பட்ட எந்தவித வழிகாட்டுதலும் இல்லாத நிலைதான் உள்ளது. இதனால் கீழ்மட்டத்தில் உள்ள அதிகாரிகள், தங்களை தாங்களே காத்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இதன்மூலம் அரசு அதிகாரி கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் மக்களுக்காக சட்டத்தின்படிதான் செயல்பட வேண்டும் என்பதுதான். சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடாது. அதிகாரிகள் மக்களுக்காக செயல்படவில்லை என்றால் பொதுமக்கள் எங்கே சென்று முறையிடுவார்கள்?

முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும்

நீதி, சமத்துவத்தின் அடிப்படையில் அரசு நிர்வாகத்தை நடத்த வேண்டும். அதிகாரிகள் தங்கள் கடமையை பயமின்றி நேர்மையாக செய்திருந்தால் 2ஜி அலைக்கற்றை முறைகேடு, நிலக்கரி ஊழல், காமன்வெல்த் ஊழல் போன்றவை நடந்திருக்காது. இதற்கு நீதிமன்ற தீர்ப்புகளே ஆதாரமாக உள்ளன. புதுவையில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும்.

இவ்வாறு கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com