

பெருந்துறை,
பெருந்துறை சென்னியவலசு பகுதியை சேர்ந்தவர் கோபால் (வயது 54). முடி திருத்தும் தொழிலாளி. இவருடைய மனைவி மகேஸ்வரி. நேற்று பகல் 1 மணி அளவில் கோபால் பெருந்துறை ஆர்.எஸ்.ரோட்டில் இருந்து சென்னியவலசுக்கு மொபட்டில் சென்றுகொண்டு இருந்தார். பெருந்துறை போலீஸ் நிலைய ரவுண்டானா அருகே கோபால் சென்றபோது, பின்னால் வந்த ஒரு லாரி கண்இமைக்கும் நேரத்தில் மொபட்டின்மீது மோதியது. இதனால் மொபட்டில் இருந்து ரோட்டில் விழுந்த கோபாலின் மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் இறந்துவிட்டார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும், பெருந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கோபாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார்கள். விபத்து ஏற்பட்டதும், லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகிறார். விபத்தில் இறந்த கோபாலுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.