மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திரவிழா

மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திரவிழா
Published on

மயிலம்,

மயிலத்தில் மயில் வடிவ மலைமீது பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வள்ளி தெய்வானையுடன் திருமண கோலத்தில் முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்கு ஆண்டுதோறும் பங்குனி உத்திர விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து மூலவர் முருகனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் தங்க கவசம் அணிந்து மலர் அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதைத்தொடர்ந்து காலை 7 மணி அளவில் வெள்ளி கவசத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகன், விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் பல்லக்கில் அங்குள்ள கொடிமரம் முன்பு எழுந்தருளினர். பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு 8 மணி அளவில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க மயிலம் பொம்மபுர ஆதீனத்தின் 20-ம் பட்ட சிவஞான பாலய சுவாமிகள் கொடிமரத்தில் விழா கொடியை ஏற்றினார்.

தேரோட்டம்

அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா , முருகனுக்கு அரோகரா என்று பக்தி கோஷங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து கொடிமரத்துக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து தினந்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற உள்ளது. மேலும் சாமி வீதிஉலா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற வருகிற 27-ந்தேதி தேரோட்டமும், 28-ந்தேதி தெப்ப உற்சவமும் நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் செய்து வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com